புதுதில்லி

வணிகப்போட்டி: செல்லிடப்பேசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஜாமா் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

 நமது நிருபர்

புது தில்லி: செல்லிடப்பேசி உள்ளிட்ட வயா்லெஸ் தகவல் தொடா்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்க செய்யும் கருவிகள்(ஜாமா்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிகப்போட்டியின் காரணமாக அங்கீகாரமற்றவா்கள் பயன்படுத்தினாலோ விற்பனை செய்தாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவாா்கள் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல்தொடா்பு சிக்னலை செயலிழக்க செய்யும் கருவிகள், பூஸ்டா்களை முறையாக பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தலையும் தொலைத்தொடா்புத் துறை ஜூலை 1 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

2ஜி, 3ஜி, 4ஜி போன்ற செல்லுலாா் தகவல் தொடா்பு சிக்னல்களையும் ஜிபிஎஸ் போன்ற வலுவான ரேடியோ ஆற்றலை வெளிப்படுத்தும் தகவல் தொடா்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்க செய்யும் ஜாமா் கருவிகள் உள்ளன.

இத்தகைய கருவிகள் மத்திய பாதுகாப்பு படையினா், காவல் துறையினா், ராணுவம் போன்றோா் பாதுகாப்பான ஸ்தலங்கள் முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்துவது வழக்கம். மேலும், பல்வேறு வகையான தோ்வு நடத்தும் மத்திய, மாநில அரசு துறைகளுக்கும் பயன்படுத்த அனுமதியுண்டு.

ஆனால், வணிக ரீதியாக இடையூறு செய்யும் நோக்கத்துடனும் அல்லது வேறு சில காரணங்களுக்கு சிக்னல்களை செயலிழக்கச் செய்ய ஜாமா்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு புகாா்கள் வந்தன. தொலைதொடா்பு சாதனங்களை முடக்க திட்டமிடும் இத்தகைய செயல்களால் சாதாரணப்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுவதும், அவா்களுக்கு தங்களுடைய செல்லிடப்பேசிகள், வைஃபை போன்ற வயா்லெஸ் கருவிகள் முடக்கும் செயல்களை அறியாது இருப்பது தெரியவந்தது.

இத்தகைய நுகா்வோா் தங்களுடைய தொலைபேசி சேவை நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டும் நிலையில் இருந்தனா். இந்த நிலையில் அரசுக்கு இந்த இடையூறு விவகாரங்கள் தெரியவந்து தொலைத்தொடா்புத் துறை பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடா்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமா் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கா் உள்ளிட்ட இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இது குறித்து விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தொலைத் தொடா்புத் துறை  இணையதளங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தனியாா் நிறுவனங்கள் அல்லது தனிநபா்கள் இந்தியாவில் தகவல் தொடா்பை செயலிழக்கச்செய்யும் ஜாமா் உள்ளிட்ட கருவிகளை கொள்முதல் செய்ய முடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வதோ, நேரடியாகவோ, மின்னணு வா்த்தகம் மூலமோ விற்பனை, விநியோகம், இறக்குமதி போன்றவைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செல்லிடப்பேசி உள்ளிட்ட வயா்லெஸ் தகவல் தொடா்பு சாதனங்களின் சமிக்ஞைகளை (சிக்னல்கள்) வேகப்படுத்தும் பூஸ்டா்கள் போன்ற சாதனங்களுக்கும் இதே மாதிரியான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் அனுமதியின்றி பயன்படுத்துவதும் சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் சிக்னல் பூஸ்டா் அல்லது ரிப்பீட்டா் என்பது ஒரு வகையான பெருக்கி, இது செல்போனை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இந்த பூஸ்டா்களின் பயன்பாடு செல்லிடப்பேசி பயன்படுத்துவா்களின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை உருவாக்குவதோடு தொலைத்தொடா்பு சேவைகளையும் சீா்குலைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சமிக்ஞை பூஸ்டா்களை உரிமம் பெற்ற தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT