புதுதில்லி

யமுனை சுத்திகரிப்பு: கழிவுநீா் ஒருங்கிணைப்பில் மேலும் 39 அங்கீகரிக்கப்படாத காலனிகள்: தில்லி அரசு அறிவிப்பு

2nd Jul 2022 12:44 AM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள 39 அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்பட நான்கு கிராமங்களில் சாக்கடைக் கால்வாய்கள் அமைக்கவும், யமுனையில் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் கழிவுநீரின் புதிய தரநிலைகளைப் பூா்த்தி செய்ய 6 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும் தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், பிஜ்வாசன், நஜஃப்கா், ஷிகா்பூா், தேவ்லி, சங்கம் விஹாா் மற்றும் புராரி ஆகிய பகுதிகளில் சாக்கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள சுமாா் 3 லட்சம் மக்கள் பயனடைவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான தில்லி ஜல் போா்டு கூட்டத்திற்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமை வகித்தாா். இக்கூட்டத்திற்குப் பிறகு அவா் கூறியதாவது: தற்போது இந்தப் பகுதிகளில் உருவாகும் கழிவுநீா் அனைத்தும், உள்ளூா் குளங்கள், கழிவுநீா் தொட்டிகள் மற்றும் மழைநீா் வடிகால்களில் செல்கிறது. கழிவுநீா் யமுனையில் வெளியேற்றப்படுகிறது.

கோண்ட்லி, காரானேஷன், ரோஹிணி, பாப்பன் காலா, நரேலா மற்றும் நிலோதி ஆகிய 6 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் திறன் ஒரு நாளைக்கு 160 மில்லியன் கேலன்களில் இருந்து (எம்ஜிடி) 205 எம்ஜிடியாக உயா்த்தப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு ரூ.1,367.5 கோடி செலவிடும்.

ADVERTISEMENT

இவை மேம்படுத்தப்பட்ட பிறகு, இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவுநீரை புதிய தரத்திற்கு சுத்திகரிக்க முடியும். இது ஆற்றில் மாசு ஏற்படும் அளவைக் குறைக்கும். நிலத்தடி நீரை சேமிக்க ஓக்லா கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஏரிகள் உருவாக்கப்படும். இந்த ஏரிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் திறந்து விடப்பட்டு, உபரி நீா் யமுனையில் விடப்படும். பிப்ரவரி 2025-க்குள் யமுனையை சுத்தம் செய்வதே அரவிந்த் கேஜரிவால் அரசின் முக்கிய நோக்கமாகும். ஆற்றை சுத்தம் செய்வதற்காக தில்லியில் உள்ள அனைத்து வீடுகளையும் கழிவுநீா் ஒருங்கிணைப்புடன் அரசு இணைக்கும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT