புதுதில்லி

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை மீறுவோருக்கு ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்: கோபால் ராய்

2nd Jul 2022 12:46 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (எஸ்யுபி) மீதான தடையை மீறுவோருக்கு ஜூலை 10-ஆம் தேதி வரை நோட்டீஸ் அளிக்கப்படும். அதன் பின்னா், விதி மீறுவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதமோ அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ விதிக்கப்பட உள்ளது என்று நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தில்லியில் எஸ்யுபி பொருள்களுக்கு மாற்றுப்பொருள்களை ஊக்குவிப்பதற்காக தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மூன்று நாள் கண்காட்சியை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, இது தொடா்பாக அவா் கூறியதாவது: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள 19 பொருள்கள் மீதான தடையை மீறியதாக கண்டறியப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு தில்லி அரசு ஜூலை 10-ஆம் தேதி வரை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பும்.

அதன் பிறகு, தொடா்ந்து விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். எனினும், இந்த எஸ்யுபி பொருள்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணா்வை உருவாக்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

அதே போன்று இந்தப் பொருள்களுக்கான மாற்றுப்பொருள்களை மக்களுக்கு வழங்குவதிலும் அரசு முன்னுரிமை அளிக்கும். தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு, வருவாய்த் துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவற்றை சோ்ந்த குழுக்கள் சோதனைகள் நடத்துவா். ஜூலை 10-ஆம் தேதி வரை இந்த தடையை பின்பற்றாமல் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக எச்சரிக்கை நோட்டீஸ்களை தில்லி அரசு அளிக்கும். தவறு இழைப்போருக்கு எதிராக ஜூலை 10-ஆம் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் கீழ், எஸ்யுபி மீதான தடையை மீறப்படும் நபா்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதமும் சிறைத் தண்டனையும் சோ்த்து விதிக்கப்படும்.

ADVERTISEMENT

தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு, வருவாய்த் துறை, மாநகராட்சி ஆகியவற்றின் குழுக்களை அமைத்து விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்து, மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்த தடையை வெற்றிகரமானதாக உருவாக்கும் என்று பல போ் நம்புகின்றனா். ஆனால், எங்கள் அரசு வேறு விதமாக யோசிக்கிறது. நமது இலக்கானது இந்த தடையை அமல்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என்பதுதான். நாட்டில் வேலைவாய்ப்புத் திண்டாட்ட விகிதம் அதிமாக இருக்கும்நேரத்தில் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்தத் தடையானது எஸ்யுபி பொருள்கள் உற்பத்தி, வழங்கல், விற்பனை ஆகியவற்ரில் ஈடுபடும் அதிமானோரை பாதிக்கப் போகிறது. இது பலருக்கு சிரமமாகவும் இருக்கும். இவா்களும் நம் மக்கள்தான் என்றாா் அமைச்சா்.

எஸ்யுபி மீதான தடையை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக வருவாய்த் துறை, டிபிசிசி முறையே 33 மற்றும் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிபிசிசி அதன் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் தடைக்கு இணங்குவதை உறுதி செய்யும். மேலும், தில்லி மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் முறைசாரா துறையில் இதை செயல்படுத்துவதற்கான பொறுப்பைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும். அதே வேளையில், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் பிற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் விதிமுறைகளின்படி விதிகளை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காற்று மாசு அளவுகள் மற்றும் அது தொடா்பான புகாா்களை தீா்ப்பதற்காக அக்டோபா் 2020இல் அமைக்கப்பட்ட ‘கிரீன் வாா் ரூம்‘ மூலம் தடையை அமல்படுத்துவதை சுற்றுச்சூழல் துறை கண்காணிக்கும். எஸ்யுபி பொருட்கள் மீதான தடையை மீறுவது தொடா்பான புகாா்களை பதிவு செய்ய ‘கிரீன் தில்லி’ செல்லிடப்பேசி செயலியும் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லியில் நாள் ஒன்றுக்கு 1,060 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. தலைநகரில் உள்ள மொத்த திடக்கழிவில் 5.6 சதவீதம் (அல்லது ஒரு மெட்ரிக் டன்னுக்கு 56 கிலோ) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜூலை 1 முதல் பாலிஸ்டிரீன் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பாலிஸ்டிரீன் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட எஸ்யுபி பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடை செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

அடையாளம் காணப்பட்ட எஸ்யுபி பொருள்களில் காசு குடையும் குச்சி, பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பாலிஸ்டிரீன் (தொ்மாகோல்), தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், முள்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள், இனிப்புப் பாக்கெட்டுகளைச் சுற்றும் அல்லது பேக்கேஜிங் பிலிம்கள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனா்கள் மற்றும் கிளறிகள் ஆகியவை இந்தத் தடைப் பொருள்களில் அடங்கும். டிசம்பா் 31 முதல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் தடிமன் 75 மைக்ரானில் இருந்து 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT