புதுதில்லி

தில்லியில் ஜனவரியில் இதுவரை 88.2. மீ.மீ மழை: 122 ஆண்டுகளில் அதிகபட்சமாக பதிவு

DIN


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் தில்லியின் ஒட்டுமொத்த மழைப் பொழிவு இந்த ஜனவரியில் 88.2 மி.மீட்டராக இருந்தது, இது 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு (122 ஆண்டுகள்) இந்த மாதத்தில் பதிவாகியுள்ள அதிகபட்சமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட மூன்று புள்ளிகள் அதிகமாகும்.

வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில், தொடா்ந்து இரண்டு அடுத்தடுத்த மேற்கத்திய இடையூறுகள் காரணமாக தில்லியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை 63 மி. மீ. மழை பதிவானது என்றாா். இதற்கு முன், தலைநகரில் 1989-இல் 79.7 மி.மீ. மழையும், 1953-இல் 73.7 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது.

பாலத்தில் 110 மி.மீ. மழை: தில்லியின் அடையாளமாகக் கருதப்படும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 6 மழை நாள்களும், இந்த ஜனவரியில் இதுவரை 88.2 மி.மீ. மழைப் பொழிவும் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று மற்ற வானிலை மையங்களான ஆயாநகரில் 25 மி.மீ., லோதி ரோடில் 27 மி.மீ., நரேலாவில் 10 மி.மீ., பாலத்தில் 28 மி.மீ., ரிட்ஜில் 18 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 1.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் இந்த மாதத்தில் இதுவரை 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மழையானது தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலையை சனிக்கிழமையன்று 14.7 டிகிரி செல்சியஸாகக் குறைத்துள்ளது. இது இயல்பை விட ஏழு புள்ளிகள் குறைவாகவும்.மேலும், இது இதுவரை இந்த பருவத்தில் பதிவான மிகக் குறைவானதாகவும் இருந்தது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்துள்ளது. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் உள்ளது.

ஜனவரி 9 மற்றும் ஜனவரி 19-க்கு இடைப்பட்ட காலத்தில் சூரிய ஒளி நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தடுக்கும் மேகங்கள் மற்றும் மழையே இதற்குக் காரணம் என்று வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தை அறிவிக்கும் ஸ்கைமெட் துணைத் தலைவா் மஹேஸ்ட் பலாவத் கூறினாா். ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை பெய்த மழையால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. இது குறைந்த வெப்பநிலைக்கு வழிவகுத்தது. இதையடுத்து, பனிமூட்டமான நிலைமைகளுக்கும் வழிவகுத்தது. ’கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வரையிலும் மூடுபனி மற்றும் குறைவான மேகங்கள் காரணமாக தலைநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிா் நாள் நிலை நீடித்தது. மேலும், ஜனவரி 16 முதல் மேற்கத்திய இடையூறுகளின் காரணமாக பகல் நேரத்தில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது’ என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் இந்த ஆண்டு ஜனவரியில் ஆறு மேற்கத்திய இடையூறுகள் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தில் பொதுவாக மூன்று முதல் நான்கு வரைதான சாதாரணமாக இருக்கும் என்றும் பலாவத் கூறினாா். ‘ஜனவரி 1 மற்றும் ஜனவரி 9-க்கு இடைப்பட்ட காலத்தில் தில்லி மூன்று மேற்கத்திய இடையூறுகளைக் கண்டது. மேலும், இது ஜனவரி 16 முதல் தலைநகரை பாதித்துள்ளன. இதில் கடைசியாக ஜனவரி 21-இல் பாதித்துள்ளது’ என்று அவா் கூறினாா்.

வெப்பநிலை: இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 10.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 6 டிகிரி குறைந்து 14.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 84 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, இதேபோன்று மற்ற வானிலை ஆய்வு மையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஜாபல்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 12.5 டிகிரி, ஆயாநகரில் 10 டிகிரி, லோதி ரோடில் 10.2 டிகிரி, நரேலாவில் 10.7 டிகிரி, பாலத்தில் 10.6 டிகிரி, ரிட்ஜில் 8.8 டிகிரி, பீதம்புராவில் 12.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 24) ‘குளிா் நாள்’ நிலைமை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT