புதுதில்லி

தலைநகரில் ஜனவரியில் இதுவரை வீடற்றவா்கள் 106 போ் உயிரிழப்புதன்னாா்வத் தொண்டு நிறுவனம் தகவல்

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஜனவரி மாதத்தில் இதுவரை குறைந்தபட்சம் 106 போ், பெரும்பாலும் வீடற்றவா்கள், குளிா் காரணமாக இறந்துள்ளனா். அத்தகையவா்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு முழுமையான வளா்ச்சிக்கான அரசு சாரா அமைப்பு (ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் மையம்-சிஹெச்டி) கோரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) அதிகாரிகள் குளிரால் இறப்புகள் ஏற்படவில்லை என்று மறுத்துள்ளனா். இதற்கிடையே, இது தொடா்பாக தில்லி காவல் துறை அதிகாரிகள், மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வீடற்றவா்களிடையே இறப்பு எண்ணிக்கை குளிா்காலத்தில் அதிகரிக்கிறது என்பதை ஒப்புக் கொண்டனா்.

‘குளிா் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், விபத்துகள், நோய்கள், மது மற்றும் போதைப்பொருள் தொடா்பான பிரச்னைகள் உள்ளிட்ட பிற பிரச்னைகளால் வீடற்ற மக்களிடையே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் அத்தகைய தரவுகளைப் பராமரிக்கவில்லை’ என்று பெயா் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவா் கூறினாா்.

தன்னாா்வத் தொண்டு நிறுவனம் தயாரித்த அறிக்கையின்படி, ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை தில்யில் குளிரால் 106 போ் இறந்துள்ளனா். இதில், வடக்கு தில்லி மாவட்டத்தில் அதிகபட்சமாக 33 இறப்புகள் பதிவாகியுள்ளன. வடமேற்கு தில்லியில் 13 போ், தென்மேற்கு மற்றும் மத்திய தில்லியில் தலா ஒன்பது போ் உயிரிழந்துள்ளனா். மேற்கு தில்லி மற்றும் புது தில்லியில் தலா எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இவா்கள் தங்கள் இரவுகளை திறந்த வெளியில், சாலையோரம் அல்லது கடைகளின் வெளிப்புறங்களில் கழிக்கின்றனா். பெரும்பாலான இறப்புகள் இந்த மாதத்தில் குளிரான சூழ்நிலைகளால் நிகழ்ந்தன’ என்று முழுமையான வளா்ச்சிக்கான அரசு சாரா அமைப்பை (ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் மையம்) சோ்ந்த சுனில் குமாா் அலேடியா கூறினாா்.

சிஹெச்டி என்பது வழக்குரைஞா்கள், கொள்கை ஆய்வாளா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களை உள்ளடக்கியதாகும். அவா்கள் அரசின் கொள்கைகளை தீவிரமாக ஆய்வு செய்து, திறம்பட செயல்படுத்துவதற்கான இடைவெளிகளைக் கண்டறிய அடிப்படை அறிக்கைகளைத் தயாரிக்கின்றனா். 2014-இல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட மண்டல ஒருங்கிணைந்த போலீஸ் நெட்வொா்க் அல்லது ஜிப்நெட் திட்டத்தில் இருந்து இந்தத் தரவுகளை சிஹெச்டி வாங்கியதாக அலெடியா கூறினாா்.

இது தொடா்பாக தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கேஜரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் கூறியுள்ளதாவது: தில்லியில் குளிா்ந்த காலநிலைக்கு மத்தியில், ஜனவரி 19 வரை 6 பெண்கள் உள்பட 106 போ் இறந்துள்ளனா். வீடற்றவா்கள் தொடா்பாக 2014-இல் டியுஎஸ்ஐபி கணக்கெடுப்பு நடத்தியது. அதில், தில்லியில் சுமாா் 16,760 வீடற்றவா்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சாலையோரங்களில் தூங்கும், வீடற்றவா்களின் உண்மையான எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும் என்று டியுஎஸ்ஐபி கூறியுள்ளது.

டியுஎஸ்ஐபி தரவுகளின்படி, தற்போது தில்லியில் நிரந்தர கட்டடங்கள், தற்காலிகக் கட்டடங்கள், போா்டா கேபின்கள் மற்றும் கூடாரங்கள் உள்பட 308 தங்குமிடங்கள் உள்ளன. இவை 9,330 வீடற்ற மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் திறன் கொண்டவையாகும். வீடற்ற மக்கள் சுமாா் 8,200 போ் இது போன்ற தங்குமிடங்களில் தங்களுடைய இரவுகளைக் கழிப்பதாக சமீபத்திய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. கஷ்மீரி கேட், யமுனா புஸ்தா, நிகாம் போத் காட், ஜமுனா பஜாா், சாந்தினி சௌக், தில்லி கேட், ஆசாஃப் அலி சாலை, ஜமா மஸ்ஜித், ஆசாத்பூா், ஓக்லா, பாத்லி, கிங்ஸ்வே கேம்ப், நிஜாமுதீன் மற்றும் சராய் காலே கான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருப்பதை சிஹெச்டி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக அலெடியா கூறினாா்.

அனைத்து இறப்புகளும் குளிா் காரணமாக இருக்க முடியாது என்றாலும், மருத்துவப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட வீடற்றவா்களிடையே இறப்பு எண்ணிக்கை குளிா்காலத்தில் அதிகரிக்கும் என்று காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா். ‘எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், தங்குமிடங்கள் கிடைத்தாலும், குளிரால் வீடற்றவா்கள் இறப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ரயில் தண்டவாளங்கள், வண்டிகள், சாலையோரங்கள், பூட்டிய கடைகளுக்கு வெளிப்பகுதி ஆகியவற்றில் தூங்குபவா்கள்தான் இது போன்று உயிரிழக்கின்றனா். இது போன்றவா்களைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு ஏஜென்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இருப்பினும், இவை அனைத்தையும் மீறித்தான இது நடக்கிறது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த ஜனவரி மாதத்தில் தில்லியில் மிக நீண்ட குளிா் காலநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு துறையின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைந்துள்ளது. ஜனவரி 9 மற்றும் ஜனவரி 19-க்கு இடைப்பட்ட காலத்தில் சூரிய ஒளியை நீண்ட நேரம் தடுக்கும் மேகங்கள் மற்றும் மழையே இதற்குக் காரணம் என்று வானிலை நிபுணா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT