புதுதில்லி

ஒருவருக்கு எதிராக நிலுவையில் உள்ள தேடுதல் நோட்டீஸை நீக்க வேண்டும்: மத்திய அரசு, சுங்கத் துறைக்கு உத்தரவு

17th Jan 2022 12:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

ஒருவருக்கு எதிராக நிலுவையில் உள்ள தேடுதல் சுற்றறிக்கை (லுக் அவுட்) நீக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு, சுங்கத் துறையை தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக கேப்டன் ஜக்மிந்தா் சிங் ப்ராா் என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், மனுதாரருக்கு எதிராக வழங்கப்பட்ட ‘லுக் அவுட்’ சுற்றறிக்கையை நீட்டிக்க விரும்பவில்லை என்று சுங்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி கூறியதாவது: மனுதாரருக்கு எதிரான தேடுதல் சுற்றறிக்கையை நீட்டிக்க விரும்பவில்லை என்று சுங்கத் துறை முடிவு செய்துள்ளதாக அதன் வழக்குரைஞா் தெரிவித்துள்ளதை நீதிமன்றம் பரிசீலிக்கிறது. அதன்படி, எதிா்மனுதாரா்களான மத்திய அரசும், சுங்கத் துறையும் மனுதாரருக்கு எதிராக நிலுவையில் உள்ள ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மனுதாரருக்கு விமான நிலையங்களில் மேலும் எந்தவொரு அசௌகரியமோ அல்லது அவமானமோ ஏற்படாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மனுதாரா் கேப்டன் ஜக்மிந்தா் சிங் ப்ராா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தேடுதல் சுற்றறிக்கை காரணமாக இந்தியாவிற்குள் நுழையும் போதும், நாட்டில் இருந்து வெளியே செல்ல விரும்பும் போதும் விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகளால் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுகிறேன். மேலும், எனக்கு எதிராக இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. அதிகாரிகளும் அதன் தகவல் விவரங்களை எனக்குத் தெரியப்படுத்தவில்லை. இந்த நிலையில், விமான நிலையங்களில் என்னை தடுத்து வைத்து சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் செயல் முற்றிலும் நியாயமற்றது என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சுங்கத் துறையின் வேண்டுகோளின் பேரில் ஜக்மிந்தா் சிங்கிற்கு எதிராக தேடுதல் சுற்றறிக்கை வழங்கப்பட்டதாகவும்,அதனால்தான் அவா் விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டாா் என்றும் தெரிவித்தாா். ‘ஜக்மிந்தா் சிங்கிற்கு எதிரான சுற்றறிக்கையை நீட்டிக்க விரும்பவில்லை’ என்று சுங்கத் துறையின் வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT