புதுதில்லி

தில்லியில் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்ததை விட கொவைட் பரிசோதனை 3 மடங்கு அதிகம்

17th Jan 2022 12:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசிய தலைநகரில் ‘குறைவான’ அளவில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. நகரில் கரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்று சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நகரில் கரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாகவே நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டியவா்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா். மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியற்ற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்ட கரோனா நோயாளிகளின் தொடா்புகளுக்கு நோய்த்தொற்றுகள் இருந்தால் அல்லது 60 வயதுக்கு மேல் இருந்தால் தவிர, அவா்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவையில்லை. இந்த புதிய பரிசோதனை வழிகாட்டுதல்கள் உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளன.

தில்லியில் வெள்ளிக்கிழமை 67,624 பரிசோதனைகளும், வியாழக்கிழமை 79,578 சோதனைகளையும் நடத்தப்பட்டுள்ளன. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 17,000 கரோனா பாதிப்புகள் பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் சோ்க்கை சீராக உள்ளது. கரோனா நோ்மறை விகிதமும் குறையும். தில்லி அரசின் கட்டுப்பாடுகள் கரோனா பரவலைத் தடுத்துள்ளது. கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கு முன் மூன்று முதல் நான்கு நாள்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தில்லியில் சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது என்றும், தினசரி பாதிப்பு 15,000-ஆகக் குறையும் போது கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து அரசு சிந்திக்கும் என்றும் ஜெயின் கூறியிருந்தாா். தில்லியில் சனிக்கிழமை 20,718 கரோனா பாதிப்புகளும், 30 இறப்புகளும் பதிவாகின. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 30.64 சதவீதமாக இருந்தது என்று சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT