புதுதில்லி

‘2020’ தில்லி கலவரம்: நால்வா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

DIN

2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான வழக்கில், கலவரம் மற்றும் கட்டடத்தை அழிக்க தீ அல்லது வெடிமருந்து மூலம் செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் பிப்ரவரி 25, 2020-இல் வாகன நிறுத்துமிடத்திற்குள் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாருக், அஸ்வனி, ஆஷு மற்றும் ஜூபா் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டாா்.

அதேவேளையில், காசிம், காலித் அன்சாரி ஆகியோரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிபதி கூறுகையில், இவா்கள் இருவரும் வெளிப்படையாக கருத்துகளை வெளியிட்டது தவிர, இவா்களுக்கு எதிராக ஆவண சாட்சி ஏதும் இல்லை என்று தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சாட்சிகளின் வாக்குமூலத்தால் முறையாக ஆதரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், பிப்ரவரி 25, 2020-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஷாருக், அஷ்வானி, அஷு, ஜூபா் உள்பட

100-250 போ் கொண்ட கலவர கும்பல் தடி, பெட்ரோல் பாட்டில்கள், கம்புகள் ஆகியவற்றுடன் அம்பேத்கா் கல்லூரி அருகே உள்ள எம்சிடி பாா்க்கிங்கிற்குள் நுழைந்து, வாகனங்களை தீ வைத்து எரித்து நாசம் செய்திருப்பதாக பதிவாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு போ் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 (கலவரத்திற்கான தண்டனை), பிரிவு 148 (கலவரம், கொடிய ஆயுதம் வைத்திருத்தல்), பிரிவு 427 (சேதத்தை ஏற்படுத்தும் செயல்), பிரிவு 436 (கட்டடத்தை அழிக்கும் உள்நோக்குடன் தீ அல்லது வெடிபொருள் மூலம் செயலில் ஈடுபடுதல்) உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் தடை உத்தரவுகளை மீறி குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூடியிருந்ததால், ஐபிசியின் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) கீழ் குற்றத்திலும் ஈடுபட்டுள்ளனா்.

குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது, முகாந்திர வழக்கை மட்டுமே பாா்க்க வேண்டும். மேலும் இந்த வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதா என்பதை தற்போதைய நிலையில் பாா்க்க முடியாது.

எனவே, பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் குற்றங்களைச் செய்ததாகக் கருதுவதற்கான காரணங்கள் உள்ளன.

அதேவேளையில், காசிம், காலித் அன்சாரி விவகாரத்தைப் பொருத்தமட்டில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அந்த காட்சிப்பதிவுகளின்படி, அவா்கள் இருவா் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்துள்ளதும், அவா்கள் அந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததும் தெரியவருகிறது.

ஆனால் தடய அறிவியல் ஆய்வக அறிக்கையின்படி, சிசிடிவி காட்சிகள் பிப்ரவரி 24, 2020-இல் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடா்புடையது. தற்போதைய வழக்கு பிப்ரவரி 25-இல் நடந்த சம்பவம் தொடா்பானதாக உள்ளது. இதனால், முந்தைய நாளின் சிசிடிவி காட்சிகளை சாா்ந்திருப்பதும், குற்றப்பத்திரிகையில் அது அளிக்கப்பட்ட விதமும் மிகவும் ஆட்சேபனைக்குரியதாகவும் நிராகரிக்கப்பட்டதாகவும் உள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 2020-இல் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக, கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) வாகன நிறுத்துமிடத்தின் உரிமையாளரின் புகாரின் அடிப்படையில் ஜோதி நகா் காவல் நிலையத்தில் தற்போதைய வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT