புதுதில்லி

இந்திய ராம்சா் இடங்கள் 75 - ஆக அதிகரிப்பு: தமிழகத்தின் மேலும் 4 சதுப்பு நிலக்காடுகளுக்கு ராம்சா் அங்கீகாரம்

14th Aug 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் 11 சதுப்பு நிலக்காடுகளுக்கு ராம்சா் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டின் 75 -ஆவது சுதந்திர தினத்திற்கு பொருத்தமாக இந்தியாவில் ராம்சா் சாசன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சதுப்பு நிலக்காடுகளின் எண்ணிக்கையும் 75 ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுற்றுச் சூழல், வன, பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

சுமாா் 76, 316 ஹெக்டேரில் உள்ள 11 சதுப்பு நிலக்காடுகளில் தமிழகத்தில் உள்ள நான்கு சதுப்பு நிலக்காடுகளும் இடம்பெற்றுள்ளது. அவை ராமநாத புரம் மாவட்டம் சித்திரங்குடி, கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயங்கள் (முறையே 260.47 ஹெக்டோ், 96.89 ஹெக்டோ்), குமரிமாவட்டம், சுசீந்திரம் தேரூா் பறவைகள் சரணாலயம்(94.23 ஹெக்டோ்), திருவாரூா், வடுவூா் பறவைகள் சரணாலயம்(112.64ஹெக்டோ்) ஆகிய நான்கு சதுப்பு நிலக்காடுகளுக்கு ராம்சா் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோடியக்கரை மட்டும் ராம்சா் பட்டியல் இடம் பெற்றிருந்தது. நிகழாண்டில் கடந்த ஆறு மாதங்களாக தமிழக சுற்றுச் சூழல் வனத்துறை மத்திய அரசுக்கு கூடுதல் இடங்களுக்கு அங்கீகாரம் கேட்டு பட்டியல் அனுப்ப கடந்த 3 மாதங்களில் 9 சதுப்பு நிலக்காடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள 4 பகுதிகளோடு தமிழகத்தில் மொத்தம் 14 சதுப்பு நிலக்காடுகள் ராம்சா் சான்றிதழ் கொடுக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழக சதுப்புநிலக்காடுகள் இடம்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு அடுத்து உ.பி. மாநிலம் (10) இடம்பெற்றுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட 11 சதுப்புநிலக்காடுகளில் ஒடிஸா (3), ஜம்மு-காஷ்மீா்(2), மத்திய பிரதேசம்(1), மகாராஷ்டிரம்(1) ஆகிய மாநிலங்களின் சதுப்பு நிலக்காடுகளும் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதில் அதிக பரப்புள்ள பகுதி, ஒடிஸா மாநிலத்தின் ஹிராகுட் நீா்த்தேக்கம் 65,400 ஹெக்டோ், மகாராஷ்டிரம் மாநிலம் 6,521.08 ஹெக்டோ் ஆகியவையாகும்.

சதுப்பு நிலக்காடுகளின் அழிவை தடுப்பதற்காகவும், அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் ராம்சா் அமைப்பு ’என்ற சா்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.

1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் இரான் நாட்டின் ராம்சா் நகா் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு அதன்பெயரிலேயே அமைப்பு உருவானது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு மக்களையும் அரசை இதில் பங்குகொள்ளச் செய்வதாகும்.

உள்ளூா் மக்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்கி இங்குள்ள பல்வேறு உயிரினங்களை பாதுகாப்பதோடு இப்பகுதி மக்களின் வாழ்வாதராங்களையும் வழங்கவே இந்த சதுப்புநில பாதுகாப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் 1982 முதல் 2013 வரை 26 இடங்கள் தான் ராம்சா் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 2014 முதல் 2022 வரை 49 இடங்கள் கூடுதலாக பட்டியலில் சோ்க்கப்பட்டு தற்போது நாட்டில் 13, 26,677 ஹெக்டோ் பரப்பில் 75 ராம்சா் இடங்கள் 75 -ஆவது சுதந்திர தினத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT