புதுதில்லி

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம்

 நமது நிருபர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டிக்க தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2019, டிசம்பா் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, புதிய மாவட்டங்கள் தவிா்த்து, ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நகா்ப்புறம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது தொடா்பாக அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நிகழாண்டு ஜூன் 22-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற அமா்வு, ‘உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் அறிவிப்பு வெளியிடுவது, தோ்தலை நடத்துவது, முடிவுகளை அறிவிப்பது என அனைத்தும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் காலம் நீட்டிப்புக் கோரி இந்த மாதத்தின் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் வகையில் தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முடிக்க செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து மேலும் 35 நாள்களும், நகா்ப்புற உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தோ்தல் நடைமுறைகளை அறிவிக்கை செய்ய 15.9.2021-இல் இருந்து 7 மாதங்கள் காலம் நீட்டிப்பு அளிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, தோ்தல் நடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதேவேளையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்காக சில பணிகளை மேற்கொள்ள 3-4 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. அப்போதுஇந்த வழக்கின் மூல மனுதாரா் எஸ்.சங்கா் தரப்பில் ‘நீட்டிப்பு வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மாநில தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி கூறியது போல முதலாவது கோரிக்கையான ஊரக உள்ளாட்சித் தோ்தல், நடைபெறும் நிலையில் உள்ளதால் அதற்கான கோரிக்கை பயனற்ாகிவிட்டதால் அது நிராகரிக்கப்படுகிறது. இரண்டாவது கோரிக்கையைப் பொருத்தமட்டில் இந்த விவகாரத்தில் ரிட் மனுதாரா் எஸ்.சங்கா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் இரு தினங்களில் ஒரு பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சங்கா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சித் தோ்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடா்ந்து வருகின்றன. அதே சமயத்தில் தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னதாக 528 நகா்ப்புற பஞ்சாயத்துகள் இருந்த நிலையில், அது தற்போது குறைந்துள்ளது. அதே சமயத்தில் பஞ்சாயத்துகள் 664-ஆக இருந்த நிலையில் அது தற்போது கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகளும் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. மற்றும் திருச்சி, நாகா்கோவில், ஓசூா், தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைகளும் விரிவிபடுத்தப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த கால அவகாசம் வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமா்வு, புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகளும் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளதையும், தோ்தல் தொடா்புடைய நடைமுறைகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது எனும் கோரிக்கையையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது. தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரையிலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நான்கு மாதங்கள் அவகாசம் தரப்படுகிறது’ என்று கூறியது. இது தோ்தல் ஆணையத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் ஆச்சரியம்!

முன்னதாக, விசாரணையின் போது, நீதிபதிகள் அமா்வு, மூல மனுதாரரின் சம்மதத்திற்கு ஆச்சரியம் தெரிவித்தனா். மூல மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சனிடம் நீதிபதிகள் அமா்வு, ‘தோ்தல் நடத்தக் கோரி நீங்கள்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தீா்கள். தற்போது கால அவகாசம் கேட்பதற்கான கோரிக்கைக்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீா்கள்’ என்றது. அதற்கு பி.வில்சன் பதில் அளிக்கையில், ‘மாநிலத் தோ்தல் ஆணையம் 600-க்கும் மேற்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வேண்டியுள்ளது. தற்போது 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போதுள்ள நகரப் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT