புதுதில்லி

7 ஆண்டுகளில் ராமநாதபுரம், விருதுநகா் உள்பட 157 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

 நமது நிருபர்

கடந்த 2014 -ஆம் ஆண்டு ஜனவரி முதல் இது வரை, ராமநாதபுரம், விருதுநகா் உள்பட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தன் பங்கிற்கு ரூ.17,935.21 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்தப் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான திட்டங்களில் மத்திய அரசும், மாநில அரசும் 60: 40 என்ற விகிதத்தில் நிதிப் பங்களிப்பை அளித்துள்ளன. இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தில் 90 சதவீகிதம் வரை மத்திய அரசு தன் பங்களிப்பை அளிக்கிறது. இந்த புதிய மருத்துக் கல்லூரிகளுக்கான திட்டங்கள் நிறைவடையும் போது, இளநிலை மருத்துவப்படிப்பில் 16,000 இடங்கள் சோ்க்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தற்போது 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 6,500 மருத்துவக் கல்வி இடங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளதாகஅமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய-மாநில அரசுகளின் கீழ் ஏற்கெனவே செயல்படும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தி இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்கவும் மத்திய அரசு ரூ.2,451 கோடி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பது வருமாறு: மருத்துவ சேவையில் அதிக மனித வளத்தை வளா்க்கும் நோக்கத்தை மத்திய அரசு இடைவிடாமல் பின்பற்றி வருகிறது. இது மருத்துவக் கல்வியில் சமத்துவம் மட்டுமல்லாது புவியியல்ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீா்வு காணப்படுகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள், தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளைத் தொடங்கவும் மத்திய-மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படுகின்றன. அரசு அல்லது தனியாா் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில் பட்டியலினத்தவா்கள் பெரும்பான்மை உள்ள மாவட்டங்கள் அல்லது வளா்ச்சி நாட்டமுள்ள பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மூன்று கட்டங்களின் கீழ், 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 64 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இதில் ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட 39 வளா்ச்சி நாட்டமுள்ள மாவட்டங்களில் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் மருத்துவக கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

2014 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் கட்டத் திட்டத்திற்கு ரூ. 10, 962 கோடி ஒதுக்கப்பட்டு 20 மாநிலங்களில் 58 மருத்துவ கல்லூரிகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டன. இதில் 48 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டம் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 8 மாநிலங்களில் 8 மருத்துவக் கல்லூரி திட்டத்திற்கு மொத்தம் ரூ.6,000 கோடி (மத்திய அரசு பங்கு ரூ.3,675 கோடி ) அனுமதிக்கப்பட்டு அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு கட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 10,216.1 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.1,089.72 கோடி விடுவிப்பு: 2019 - ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட திட்டத்தில்தான் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் 75 புதிய மருத்துவக கல்லூரிகள் தொடங்க மொத்தம் ரூ. 24,375 கோடி திட்டச் செலவாக அனுமதிக்கப்பட்டது. இதில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கவும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதிக்கப்பட்டது. இந்த 75 கல்லூரிகளுக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 15,499.74 கோடியில் ரூ.6,719.11 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டது. தலா ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 375 கோடி என திட்டமிட்டு, மத்திய அரசு தன் பங்காக ரூ.195 கோடி வழங்குகிறது. இதில் தமிழகத்திற்கு ரூ. 2,145 கோடியில் ஆகஸ்ட் வரை ரூ.1,089.72 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இவை தவிர 8,000-க்கும் மேற்பட்ட புதிய முதுகலை மருத்துவ இடங்களை உருவாக்குவதற்கும் மத்திய - மாநில மருத்துவக் கல்லூரிகளை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கத்துடனும் மத்திய அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT