புதுதில்லி

நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறுகிறது: புள்ளிவிவரங்களில் தகவல்

 நமது நிருபர்

இந்திய பொருளாதாரம் மீட்சி பெற்று வருவதற்கான வலுவான அறிகுறிகளை மத்திய அரசின் பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றும், குறிப்பாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் பொருளாதாரக் குறிகாட்டிகளை கரோனா நோய்த்தொற்றுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 19 குறிகாட்டிகள் 100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன என்றும் மத்திய நிதித் துறை பொருளாதார விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
 அதன் விவரம்: கடந்த 2020 ஜனவரியில் நாட்டில் முதல் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர் நாட்டில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார சரிவை மீட்கவும் அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பொருளாதாரம் மீட்சி பெற்று வருகிறது.
 பொருளாதார மீட்சியின் முன்னேற்றம் குறித்த பல்வேறு குறிகாட்டிகளை மத்திய நிதித் துறையின் பொருளாதார விவகாரப் பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தக் கண்காணிப்பில் சமீபத்திய தகவல்களின்படி 22 முக்கியக் குறிகாட்டிகளில் 19 குறிகாட்டிகள் 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது இந்தியப் பொருளாதார மீட்சிக்கான வலுவான அறிகுறி என பொருளாதார வல்லுநர்களால் அறியப்படுகிறது.
 இந்தப் பொருளாதார குறிகாட்டிகளாக இருப்பது, யுபிஐ முறையிலான பணப் பரிவர்த்தனை, சுங்கச்சாவடி வசூல், வணிகப் பொருள்கள் இறக்குமதி- ஏற்றுமதி, நிலக்கரி, சிமெண்ட் உற்பத்தி, மின்னணு பணப் பரிவர்த்தனை, விமானம், துறைமுகம், ரயில் ஆகியவற்றின் சரக்குப் போக்குவரத்து, விமானப் பயணிகள் போக்குவரத்து, இரும்பு, மின்சக்தி, எரிபொருள் போன்றவற்றின் நுகர்வு என 22 குறிகாட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் கணக்கிடப்படுகின்றன. இதில் 100 சதவீதம், அதற்கு மேல் முழுமையாக மீட்சிபெற்ற துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் ரூ.114.8 கோடியாக இருந்தது. இது 2021, அக்டோபரில் ரூ.421.9 கோடியாக உயர்ந்தது. இது 367 சதவீத வளர்ச்சியாகும். இதேபோல 2019, அக்டோபரில் ரூ. 68.9 கோடியாக இருந்த சராசரி சுங்கச் சாவடி வசூல், 2021-இல் ரூ.108.2 கோடியாக (157 சதவீதம்) இருந்தது. இதேபோல 2019-இல் 93,820 டன்னாக இருந்த ரயில் சரக்குப் போக்குவரத்து, இந்த ஆண்டில் 1,17,000 டன்னாக அதிகரித்துள்ளது.
 இதே காலகட்டத்தில் மற்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதம்: கூகுள் இயக்கம் (மொபிலிட்டி) 148 சதவீதம், வணிகப் பொருள்கள் இறக்குமதி 146 சதவீதம், நிலக்கரி உற்பத்தி 131 சதவீதம், வணிகப் பொருள்கள் ஏற்றுமதி 135 சதவீதம், டிராக்டர் விற்பனை 120 சதவீதம், 8 முக்கிய தொழில்கள் 105 சதவீதம், தொழில் துறை உற்பத்திக் குறியீடு 104 சதவீதம் என 19 துறைகளின் குறிகாட்டிகள் 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளன. இதன் மூலம் பொருளாதாரம் முழுமையாக மீட்சி பெற்று வருவதை உணரலாம்.
 அதேசமயத்தில் எஃகு நுகர்வு 99 சதவீதம், உள்நாட்டு ஆட்டோமொபைல் விற்பனை (வர்த்தக வானகங்கள் தவிர்த்து) 86 சதவீதம், பயணிகள் விமானப் போக்குவரத்து 66 சதவீதம் ஆகியவை 2019 -ஆம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிட்டால், நிகழாண்டில் மிகக் குறைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT