புதுதில்லி

கிளாஸ்கோ ஒப்பந்தத்துக்கு இந்தியா உடன்படாதது ஏன்? அமைச்சர் விளக்கம்

 நமது நிருபர்

பருவநிலை மாற்றத்திற்கான கிளாஸ்கோ உச்சிமாநாட்டில், காடுகள், நிலம் ஆகியவற்றின் பயன்பாடுகளை வர்த்தகத்துடன் இணைத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால், இந்தியா அந்த ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறைக்கான இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும், இந்திய வனம், காடுகளின் பரப்பளவு 24.56 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 இதுகுறித்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே அளித்த பதில்: கிளாஸ்கோ நகர் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டு ஒப்பந்தத்தில், காடுகள் மற்றும் நிலத்தின் பயன்பாடுகளை வர்த்தகத்துடன் இணைத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்கவில்லை.
 1988-ஆம் ஆண்டின் தேசிய காடுகள் கொள்கையின்படி, நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் வனத்தைப் பெருக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டேராடூன் இந்திய வனவள நில அளவை அறிக்கையின்படி தற்போது 8,07,276 சதுர கிலோ மீட்டரில் சுமார் 24.56 சதவீதம் அளவுக்கு வனநிலங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டை விட 13,209 சதுர கி.மீட்டர் பரப்பளவு வனம் அதிகரித்துள்ளது.
 பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, 300 கோடி டன் கரியமில வாயுவை மூழ்கடிக்கத் தேவையான மரங்களுடன் கூடிய காடுகளின் பரப்பளவை, 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான பல்வேறு திட்டங்களை மாநிலங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்றத் துறை அளித்தது என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT