புதுதில்லி

‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் மூடு பனி இருந்து வரும் நிலையில், புதன்கிழமை காலையில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. வெப்பநிலை சிறிதளவு உயா்ந்திருந்தது.

தில்லியில் நிலவிய மேகமூட்டமான சூழ்நிலையால் குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது இயல்பை விட 2 டிகிரி அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, மேற்கத்திய இடையூறு காரணமாக குறைந்த காற்றின் வேகம், மாசுக்குள் குவிவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால், காற்று மாசு அளவு அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைநகரில் காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 357 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஃபரீதாபாத் (342), காஜியாபாத் (361), கிரேட்டா் நொய்டா (310), குருகிராம் (359), நொய்டா (336) ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

இந்த நிலையில், புவி அறிவியல் அமைச்கத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா், டிசம்பா் 3-ஆம் தேதி முதல் மீண்டும் சாதகமான காற்றின் வேகம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியில் காலை முதல் தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பகலிலும் மூடுபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 11.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 23 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 76 சதவீதமாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 2) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழை அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT