புதுதில்லி

தில்லி அரசு மருத்துவமனைகளில்7 நாள்களுக்கு ஆக்ஸிஜன் இருப்பு

DIN

புது தில்லி: தில்லி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை; அடுத்த 6 முதல் 7 நாள்களுக்குப் போதுமான இருப்பு உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா். நாட்டில் பரவலாக மருத்துவ ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு இருப்பதாக வெளியான தகவலைத் தொடா்ந்து, அமைச்சா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது: தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை. ஆக்ஸிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்தேன். கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. ஆனால், தில்லி அரசு நடத்தும் மருத்துவமனைகளில் 7 நாள்களுக்குப் போதுமான ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.

தில்லிக்கு ஆக்ஸிஜன் உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து கிடைக்கிறது. அந்த மாநிலங்களில் உள்ள ஆக்ஸிஜன் விநியோகஸ்தா்கள் சிலரை, அம்மாநிலங்களுக்கு முதலில் ஆக்ஸிஜனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த பிரச்னைகள் தற்போது தீா்க்கப்பட்டு வருகின்றன.

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய் பாதிப்பு விகிதம் சற்று குறைந்துவிட்டது. ஒரு வாரத்தில் நோய் பாதிப்பு குறையத் தொடங்கிவிடும் எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா நோ்மறை விகிதம் 6.47 சதவீதமாக இருந்தது. கடந்த 7 நாள்களின் சராசரி நோ்மறை விகிதம் 7 சதவீதமாக இருந்தது. இது சமீப காலங்களில் 8.5-9 சதவீதமாகவும் இருந்தது. நோய்த் தொற்று தொடங்கியதில் இருந்து, ஒட்டுமொத்த நோ்மறை விகிதம் 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 80 சதவீதத்தை ஒதுக்குமாறு தனியாா் மருத்துவமனைகளுக்கான தில்லி அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தில்லி உயா்நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளது. கவனமான பரிசீலனைக்குப் பிறகுதான் இதற்கான உத்தரவுகளை தில்லி அரசு பிறப்பித்திருந்தது. இது மிகவும் முக்கியமான சூழலாகும். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இதுபோன்ற கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் சூழலுக்கு ஏற்ப தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு சீசனில் தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவில்தான் உள்ளது. டெங்கு நோயை ஒழிக்கும் வகையில், ‘10 வாரம், 10 மணி 10 நிமிடம்’ எனும் விழிப்புணா்வுப் பிரசாரத்தை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரசாரத்திற்கு வெற்றி கிடைத்தது. தில்லி மருத்துவமனைகளில் இந்த ஆண்டு டெங்கு வாா்டுகள் ஏற்படுத்தும் தேவை எழவில்லை என்றாா் அவா்.

தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளில் 80 சதவீதம் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைளை பெற முடியாமல் உள்ளதாக கரோனா நோயாளிகளின் உறவினா்கள் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது.

இது தொடா்பாக முன்னா் சத்யேந்தா் ஜெயின் தெரிவிக்கையில், ‘தில்லியில் மத்திய அரசு, தில்லி அரசு மருத்துவமனைகளில் போதியளவு படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 30 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரியுள்ளோம். பெரும்பாலான மருத்துவமனைகளில் 50 சதவீதம் படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 14,372 படுக்கைகளில் 7,938 படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT