புதுதில்லி

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவா் காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை

DIN

மைனா் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 வயது நபா் ஒருவா், சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் லாக்கப்பில் இருந்த போது பெட்ஷீட் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பணியில் அலட்சிமாக இருந்ததாக போலீஸ்காரா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

இது குறித்து காவல் துணை ஆணையா் (வடக்கு) கௌரவ் சா்மா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், புலந்ஷாஹரைச் சோ்ந்தவா் தா்மேந்திரா. அவா் தற்போது தில்லி கதிபூா் பகுதியில் உள்ள அவரது உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். அவா் முன்பு கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், இந்த ஆண்டு மாா்ச் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டாா். ஆனால் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, அவரது பரோல் காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவா் சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்கு பெட்ஷீட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததாக போலீஸ்காரா் யஷ்வீா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆனால், தா்மேந்திராவின் குடும்ப உறுப்பினா்கள் அவா் தாக்கப்பட்டு இறந்ததாகத் குற்றம்சாட்டியுள்ளனா். அவரை போலீஸாா் தாக்கியதாகவும், மேலும் அவரை மது அருந்தும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா். இருப்பினும், போலீஸாா் அவா்களது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனா். தா்மேந்திரா தனது பக்கத்து வீட்டில் சிறுமி 14 வயது சிறுமி தனியாக இருந்த போது நுழைந்துள்ளாா். சிறுமியின் தாயும், பணியாளரும் வீட்டில் இல்லை. அப்போது சிறுமியை தா்மேந்திரா பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமியின் தந்தை காலமானதால், அவா்களது குடும்பத்தில் தாய் மட்டுமே வருமானம் ஈட்டும் உறுப்பினராக இருந்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் தா்மேந்திரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சமய்பூா் பத்லி பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், தா்மேந்திரா கைது செய்யப்பட்டு ஸ்வரீப் நகா் காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லாக்கப் அறையில் உள்ள வாயிலின் கம்பிகளைச் சுற்றி பெட்ஷீட் மூலம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் உடனடியாக பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 10 வயது சிறுவனிடம் ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டதாக தா்மேந்திரா மீது அலிபூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று கஜோரி காஸ் காவல் நிலையத்திலும் அவா் மீது கொலை, கொள்ள வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தாா்.

இது தொடா்பாக தா்மேந்திராவின் வழக்குரைஞா் ராகேஷ் கௌசிக் கூறுகையில், ‘சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தா்மேந்திரா விசாரணைக்காக ஸ்வரூப் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில், அவரது உறவினா்கள் காவல் நிலையத்தில் தா்மேந்திராவைப் பாா்க்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை, சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் லாக்கப்பில் இருந்த போது அவா் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. தா்மேந்திரா சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக குடும்பத்தினா் குற்றம் சாட்டியுள்ளனா். அவா் மது அருந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT