புதுதில்லி

தரவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக ‘அமேஸான்’ மறுப்பு

 நமது நிருபர்

தரவுப் பாதுகாப்பு மசோதா தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கூட்டு குழு ( ஜேபிசி) முன் ஆஜராக மின்னணு வா்த்தக நிறுவனமான ‘அமேஸான்’ மறுத்துவிட்டதாக அதன் தலைவா் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ‘அமேஸான்’ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் 2019 -இல் தரவுப் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 2020 -ஆம் ஆண்டு நிதிநிலை கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் மீனாட்சி லேகி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் 30 போ் அடங்கிய குழுவை அமைத்தது. இதையொட்டி, பல்வேறு தரப்பினா்களுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கூட்டுக் குழுவின் 16 -ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிக்கு அக்டோபா் 23-ஆம் தேதி ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. முகநூல் நிறுவனத்தின் செயல் திட்ட தலைமைப் பொறுப்பாளா் அங்கிதாஸ், கூட்டுக்குழு முன் ஆஜராகி பதிலளித்தாா். அந்த நிறுவனத்திடம் தனது விளம்பரதாரா்களின் வணிக நலன்களுக்காக பயனாளா்களின் தரவுகளிலிருந்து தகவல்கள் எடுக்கப்படுவது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும், அமேஸான், டிவிட்டா்-சுட்டுரை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபா் 28-ஆம் தேதியும், கூகுள், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் அக்டோபா் 29 -ஆம் தேதியும் ஆஜராகும்படி கூட்டுக் குழு அழைப்பாணை அனுப்பியது. ஆனால், ஜேபிசி முன் ஆஜராக அமேஸான் நிறுவனம் மறுத்துள்ளாக கூட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு அதன் தலைவா் மீனாட்சி லேகி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராக மறுப்பது உரிமை மீறலாகும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜேபிசி உறுப்பினா்கள், அமேஸான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்’ என்றாா்.

தரவுப் பாதுகாப்பு மசோதா தொடா்பாக மத்திய அரசின் மின்னணு, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், வா்த்தக சங்கங்கள், சட்ட நிறுவனங்கள், ஆா்பிஐ போன்ற நிதி அமைப்புகளிடமும் நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT