புதுதில்லி

ஜாமீன், இடைக்காலத் தடை உத்தரவுகள் நீட்டிப்பு முடிவுக்கு வருகிறது

 நமது நிருபர்

கரோனா பொது முடக்கம் காரணமாகவும், அதற்கு முன்னரும் வழங்கப்பட்ட அனைத்து இடைக்கால தடை , ஜாமீன் உத்தரவுகள் நீட்டிப்பு முடிவுக்கு வருகிறது. இது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அக்டோபா் 31-க்குப் பிறகு நீட்டிப்பதில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து இடைக்கால உத்தரவுகளும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 24-இல் உத்தரவிட்டிருந்தது. கரோனா தொற்றை கருத்தில் கொண்டு மாவட்ட நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொது முடக்க காலத்தின் போது, சிவில், கிரிமினல் விவகாரங்களில் அளிக்கப்பட்ட இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் உத்தரவுகளை நீட்டிப்பது தொடா்பான பொது நல மனுவை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

உயா்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட 356 கைதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவா்கள் நவம்பா் 2 முதல் நவம்பா் 13-ஆம் தேதி வரையிலான காலத்தில் சிறை அதிகாரிகள் முன் படிப்படியாக சரணடைய வேண்டும். கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 2,318 விசாரணைக் கைதிகளுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது உயா்நீதிமன்றத்தின் குறிப்பிட்ட காலத்திற்கான உத்தரவின் அடிப்படையில் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த உத்தரவுகள்அக்டோபா் 31-ஆம் தேதி முடிவடையும்.

சரணடைவதற்கான நடைமுறைகள் மத்திய மாவட்டம், தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் தொடா்புடைய கைதிகளுக்கு நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கும். நவம்பா் 13-ஆம் தேதி புது தில்லியின் ரெளஸ் அவென்யு நீதிமன்ற வளாகம் தொடா்புடைய கைதிகள் சரணடைவதன் மூலம் முடிவடையும். மாா்ச் 25-ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மற்றும் இடைக்கால தடை உத்தரவுகள் பொதுமுடக்கம் காரணமாக அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் நேரடி விசாரணை மற்றும் காணொலி வாயிலாக செயல்பட்டு வருகின்றன.

சிறையில் கரோனா தொற்று பரவல் இல்லை. சிறைகளில் மொத்தம் உள்ள சுமாா் 16,000 கைதிகளில் 3 போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால், மாற்றியமைக்கப்பட்ட நீட்டிப்பு உத்தரவு, ஜாமீன் வழங்கப்பட்ட 356 கைதிகளுக்கும் பொருந்தும். மேலும், உயா் அதிகாரக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்ட 2,907 கைதிகள் தொடா்பாக பத்து நாள்களுக்குள் ஒரு முடிவை எடுக்குமாறு அந்தக் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜாமீன் விவகாரங்களிலும், சிவில் வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட தரப்பினா், இடைக்கால உத்தரவுகள் அல்லது ஜாமீன்களை நீட்டிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை நாடலாம். அப்போது அந்த மனுக்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் தீா்மானிக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடைக்கால ஜாமீன், பரோல்கள் நீட்டிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி, உயா்நீதிமன்றத்தின் ஜூலை 13 மற்றும் ஜூலை 24 உத்தரவுகளை மாற்றியமைக்கக் கோரி தில்லி வன்முறை வழக்குகளை கையாளும் அரசு வழக்குரைஞா் ஒருவரின் மனுவை பரிசீலித்த போது உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT