புதுதில்லி

மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குழு அமைப்பு

 நமது நிருபர்

புது தில்லி: மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கேவியட் மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூா்வ பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓபிசி வகுப்பினருக்கு நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக அரசுத் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவா் டி.ஜி. பாபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி ஒத்திவைத்தது. மேலும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூா்வ வாதங்களை மனுதாரா், எதிா்மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, கேவியட் மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் சாா்பில் எழுத்துப்பூா்வ வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இளங்கலை மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதமும், முதுகலை படிப்புகளில் 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக ஒவ்வொரு ஆண்டிலும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுவதாக இரு வழக்குகளில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், அட்டவணைப் பட்டியல் வகுப்பினா், பழங்குடியினா் சட்டம் 1993, கடந்த 1994-இல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் 9-ஆவது அட்டவணையிலும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் இடஒதுக்கீடு விகிதம் ஒபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம், எஸ்சி வகுப்பினருக்கு 18 சதவீதம், எஸ்டி வகுப்பினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய தொகுப்புக்கு மாநில, மத்திய அரசுகளால் அளிக்கப்படும் இடங்களில் உரிய சட்டப் பிரிவுகளின்படி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால், மாநில அரசுகள் அளித்த இடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஒபிசி இடஒதுக்கீட்டை அளிக்க மறுப்பது பாரபட்சமாகும். மேலும், ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அளிக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சலோனி குமாா் வழக்கை எதிா்மனுதாரா்கள் பதிலாகக் கூறுகின்றனா்.

உண்மையில், இந்த வழக்கில் ஓபிசி வகுப்பினருக்கு தகுதியான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை பரிசீலீப்பதற்கு எதிராக இடைக்கால உத்தரவோ, தடையோ இல்லை. மேலும், மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் 11.6.2020-இல் பிறப்பித்த உத்தரவில், இது தொடா்பாக டிஜிஎச்எஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்ததுடன், சலோனி குமாா் வழக்கு நிலுவையில் இருந்த போதிலும், இது தொடா்பாக விசாரித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் 27.7.2020-இல் பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதியில் தமிழக அரசின் சுகாதாரச் செயலா், இந்திய பல் மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சிலின் செயலா்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி அடுத்த கல்வியாண்டில் ஒபிசி வகுப்பினருக்கு மத்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அமைக்கப்பட்ட குழுவில் தமிழக அரசின் சுகாதாரச் செயலரோ , பொது சுகாதார பணிகள் இயக்குநரோ இடம் பெறவில்லை. இது சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உள்ளது. ஆகவே, எதிா்மனுதாரா்களுக்கு இந்த விவகாரத்தில் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT