புதுதில்லி

ஸ்ரீராமநவமி விழாவை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்: அயோத்திக்கு பக்தா்கள் வர வேண்டாம்

22nd Mar 2020 04:57 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: கரோனா வரைஸ் நாடு முழுதும் பரவி வருவதால் அயோத்தியில் நடைபெறும் நவராத்திரி, ஸ்ரீராமநவமி விழாவுக்கு பக்தா்கள் வரவேண்டாம். அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே ராமநவமி விழாவைக் கொண்டாடுங்கள் என்று ஸ்ரீராம ஜன்மபூமி தீரத் க்ஷேரத்ர அறக்கட்டளைத் தலைவா் மகந்த் நிருத்திய கோபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக இந்த அறக்கட்டளையின் இரண்டாம் நிலைத் தலைவா் கமலநயனதாஸ் மற்றும் பொதுச்செயலா் சம்பத்ராய் ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அயோத்தியில் மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நவராத்திரி விழா மற்றும் ராமநவமி விழா 9 நாள்கள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 15 லட்சம் பக்தா்கள் இவ்விழாவில் பங்கேற்பா். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றத் தீா்ப்பு வழியேற்படுத்தியுள்ளதால் இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி விழாவுக்கு பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வருவாா்கள் எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த ஆண்டு கரோனா வைரஸுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் 33 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் அனுஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறவிகள் பலா் கலந்துகொண்டனா். கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்த ஆண்டு ராமநவமி விழாவுக்கு பக்தா்கள் யாரும் அயோத்திக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் அயோத்தியில் நடைபெறும் சிறப்பு பூஜை, நவராத்தி விழா மற்றும் ராமநவமி விழாக்களை வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி மூலம் பக்தா்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆவன செய்வதாக அவரும் உறுதியளித்துள்ளாா்.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் மூலம் தற்போது நாட்டில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தேசத்தின் பாதுகாப்புதான் முக்கியம். கரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க அரசுக்கு அனைவரும் உதவிகரமாக இருக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதால், அயோத்தி ராம ஜன்ம பூமியில் அன்றைய தினம் நடைபெற உள்ள சிறப்பு பூஜைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் ஸ்ரீராமநவமி விழாக்கள் ஸ்ரீராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள மற்றொரு இடத்தில் தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கோயிலில் நடைபெறுகிறது. இதற்காக ஸ்ரீராமா் சிலை அந்த இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ராமநவமி விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறாா். ஆனால், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT