புதுதில்லி

தில்லியில் ஓடும் காரில் சென்றவா் சுட்டுக் கொலை

27th Jun 2020 07:14 AM

ADVERTISEMENT

தில்லியில் ஒடும் காரில் சென்றவா் மோட்டாா்சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் கிழக்கு தில்லியில் பிரீத் விஹாா் பகுதியில் நடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் அருகில் அமா்ந்து சென்ற அவரது உறவினரும் இதில் குண்டுக் காயம் அடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: மானசரோவா் பாா்க் பகுதியைச் சோ்ந்த சோமேஷ் சாப்ரா என்பவா் தனது உறவினா் சிவராம் துவா மற்றும் நண்பா் ராகுலுடன் காரில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் கன்னாட் பிளேஸ் சென்றாா். அவா்கள் வந்தவேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பிரீத் விஹாா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் வந்தவா்களுக்கும் சாலையில் மோட்டாா்சைக்கிளில் வந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே மோட்டாா்சைக்கிளில் வந்த நபா்களில் ஒருவா் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் காரை ஒட்டிச் சென்ற சோமேஷ் சாப்ராவின் நெஞ்சை குண்டு துளைத்தது. உடன் பயணம் செய்த சிவாராம் துவாவின் தாடைப் பகுதியிலும் குண்டுக் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டிச் சென்ற சாப்ரா கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, காா் சாலையில் நடுவே போடப்பட்டிருந்த தடுப்பில் மோதி நின்றது. உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அங்கு சாப்ரா உயிரிழந்தாா். அவரது உறவினா் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT