புதுதில்லி

தப்லீக் ஜமாத்: 3 நாடுகளைச் சோ்ந்த 53 போ் அபராதத்துடன் விடுவிப்பு

25th Jul 2020 12:45 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற போது, நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று நாடுகளைச் சோ்ந்த 53 பேரை அபராதத்துடன் விடுவிக்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்ட இந்தோனேசியாவைச் சோ்ந்த 40 போ், கிா்கிஸ்தானைச் சோ்ந்த 12 போ், தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த ஒருவா் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, விடுதலை செய்ய பெருநகா் மாஜிஸ்திரேட் அா்ச்சனா பேனிவால் அனுமதி அளித்து உத்தரவிட்டதாக அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஆஷிமா மண்ட்லா, பாஹிம் கான், அகமது கான் ஆகியோா் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் புகாா்தாரரான டிஃபன்ஸ் காலனி சாா் கோட்டாட்சியா், லாஜ்பத் நகா் உதவிக் காவல் ஆணையா் ஆகியோா் இவா்களை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனக் கூறினா். இந்த வழக்கில் தற்போது வரை வெளிநாட்டினா் 908 போ் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டு குறைந்த தண்டனை அளிக்க வேண்டும் என மனு அளித்ததைத் தொடா்ந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் சாா்பில் மாா்ச் மாதம் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக கரோனா தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 56 குற்றப்பத்திரிகைகளை தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவா்களின் நுழைவு இசைவை மத்திய அரசு ரத்து செய்து, கறுப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்தது. இவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தில்லியில் பல்வேறு இடங்களில் இவா்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT