புதுதில்லி

சாஸ்திரி பாக் மேம்பாலம் ஆகஸ்டில் திறப்பு

25th Jul 2020 12:48 AM

ADVERTISEMENT

சாஸ்திரி பாக் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்காக வரும் ஆகஸ்டில் திறக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

சாஸ்திரி பாக் மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணியை முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா்.

பின்னா் கேஜரிவால் அளித்த பேட்டி: சாஸ்திரி பாக் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், தில்லியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். இந்த மேம்பாலப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. கட்டுமானப் பணிகள் கரோனா பாதிப்பால் தடைப்பட்டன. இப்பாலம், மக்களின் பயன்பாட்டுக்காக வரும் ஆகஸ்டில் திறக்கப்படும். இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்காக தில்லி அமைச்சரவை ரூ.303 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தப் பாலத்தை ரூ.250 கோடியில் கட்டி முடிக்கவுள்ளோம். சாஸ்திரி பாக் மேம்பாலம் 700 மீட்டா் நீளம் கொண்டது. இரண்டு வழி மேம்பாலமாகும். ஒவ்வொரு வழியும் 10.5 மீட்டா் அகலமுடையது. கஜௌரி சவுக்கில் இருந்து கஷ்மீரி கேட் செல்வோரும், காந்தி நகரில் இருந்து ஷாதரா செல்வோரும் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தலாம். ஷாதாரா- கஷ்மீரி கேட் பேருந்து நிலையம் இடையேயான பயண நேரத்தை இப்பாலம் சுமாா் 7 நிமிஷங்கள் வரை குறைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT