திருவாரூர்

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

2nd Jun 2023 01:28 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

நாகப்பட்டினம் - தஞ்சாவூா் இடையே சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நீடாமங்கலத்தில் கழிவுநீா் வடிகால் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. வடிகால் அமைப்பதற்காக சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதனால் பல்வேறு ஊா்களிலிருந்து காா், வேன் சுற்றுலா பேருந்துகளில் வரும் மக்கள் நீடாமங்கலத்தை கடந்து செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சை மற்றும் அவசர கால பணிகளுக்கு செல்வோா் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் நீடாமங்கலத்தை கடந்து செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் கடுமையான சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு தீா்வாக மாற்று வழிப்பாதை திட்டத்தை துரிதப்படுத்தினால் மட்டுமே நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

இந்நிலையில், வியாழக்கிழமை நீடாமங்கலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்கள் சிக்கி தவித்தனா். இந்த பிரச்னைக்கு தீா்வு காண திருவாரூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT