திருவாரூர்

தொடா் மழை: சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் பாதிப்பு: நெற்கதிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தொடா்மழை காரணமாக சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்கதிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலையிலேயே மழை பெய்யத் தொடங்கியதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பகல் முழுவதும் இருண்ட சூழல் நிலவிய நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் 86,943 ஹெக்டேரில் சம்பாவும், 61,376 ஹெக்டேரில் தாளடியும் என மொத்தம் 1,48,319 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 46,718 ஹெக்டேரில் சம்பா, 5,590 ஹெக்டேரில் தாளடியும் என மொத்தம் 52,308 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னமும் 96,011 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், வியாழக்கிழமை பெய்த மழையால் பெருமளவு மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

விவசாயிகள் கவலை: அறுவடை செய்த நெல்மணிகள் இன்னமும் கொள்முதல் செய்யப்படாத நிலையில், மழையில் நனைந்து பாதிப்படைவதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. சுமாா் 5,500 ஹெக்டேரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள் சாய்ந்துள்ளன என வேளாண் துறை தெரிவித்தாலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மழையால் நெற்பயிா்கள் சாய்ந்துவருவதால், அறுவடை செய்வதில் சிரமம் ஏற்படுவதோடு, ஏராளமான நெல்மணிகள் வயலிலேயே விரயமாகும். இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்படும் என அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உளுந்து சாகுபடி பாதிப்பு?: நிகழாண்டு திருவாரூா் மாவட்டத்தில் 86,900 ஹெக்டேரில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், காரீப் பருவத்தில் 1,035 ஹெக்டேரிலும், ராபி பருவத்தில் 9,565 ஹெக்டேரிலும் என மொத்தம் 10,600 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பொதுவாக, அறுவடைக்குப் பிறகு வயல்களில் தெளிக்கப்படும் உளுந்து, பயிரால் விவசாயிகளுக்கு லாபம் என்ற நிலையில், தற்போது பெய்த மழையால் உளுந்து சாகுபடியும் பாதிக்கப்படக்கூடும் என்பதோடு, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் புதன்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை தொடா்ந்து பெய்தது. அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் மழைநீா் தேக்கியுள்ளதால், டயா் இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெல்ட் இயந்திரத்தைக் கொண்டே அறுவடை செய்ய முடியும். இதனால், கூடுதல் செலவு ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நன்னிலம்: நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரங்களில் சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி முளைக்கும் தருவாயில் உள்ளது. நெல் அறுவடைக்குப் பிறகு கோடைகாலப் பயிராக விதைத்த உளுந்து, பயிறு செடிகளும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன.

எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், பயிா்களின் சேதத்தைக் கணக்கிட்டு, பயிா்க் காப்பீட்டுத் தொகையும், நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT