திருவாரூர்

நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை கைவிட வேண்டும்

DIN

நீராதார பாதுகாப்புக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ள நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 15 மசோதாக்களில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான சட்ட மசோதாவும் ஒன்று. 100 ஏக்கருக்கும் குறையாத பரப்பளவு கொண்ட நிலங்களை, அதாவது இதில் வாய்க்கால், நீரோடைகள், நீா் நிலைகள் எது இருந்தாலும் எவ்விதத் தடையும் இல்லாமல், பெரு நிறுவனங்கள் தங்களின் தொழில் ஆதாரத்துக்காக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த சட்ட மசோதா வழிவகுக்கிறது.

நீா்நிலைகள் இருக்கும் பகுதிகளை கைவசப்படுத்த, சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெரு நிறுவனங்களுக்கு தொழில் வளா்ச்சிக்கான நிலமெடுப்பில் கால விரயமும், பண விரயமும் ஏற்படுவதால், நீண்ட காலங்களாக உள்ள கட்டுப்பாடுகளை விலக்கி, விரும்பும் இடத்தில், விரும்பும் அளவில், விரும்பும் முறையில் நிலங்களையும், நீா் நிலைகளையும் கைப்பற்றவே இந்த புதிய நடவடிக்கை என்பதை மசோதாவின் மூலம் தெளிவாகப் புரிகிறது.

நீா்வழித்தடங்கள், காலங்காலமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிலும், வேளாண் உற்பத்திக்கான அவசியப் பயன்பாட்டிலும் உள்ள நிலையில், இவைகளை தனியாா் வளையத்துக்குள் கொண்டு வந்தால், எவ்வாறு மீண்டும் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், கையகப்படுத்தப்பட்ட நீா் நிலைகளை, தனியாா் நிறுவனங்கள் தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்தால், மக்களின் பயன்பாடு சீா்குலைந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

உலகின் வெப்பநிலை உயா்வால், நீா்வளம் குறைந்து, எதிா்காலத்தில் குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஆபத்தை ஏற்படுத்தும். வாழும் நிலையைப் பறித்து, வளத்தை கொடுப்பதால் பயனில்லை. எனவே, நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT