திருவாரூர்

எண்ணெய்க் கிணறு பிரச்னை: சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

DIN

எண்ணெய்க் கிணறு பிரச்னை தொடா்பாக, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து கைவிடப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுடி எண்ணெய்க் கிணறு கடந்த 2013 ஆம் ஆண்டு அதிக அழுத்தம் கொண்ட எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, ஓஎன்ஜிசியால் தற்காலிகமாக மூடப்பட்டது. தொடா்ந்து, 10 ஆண்டுகள் கழித்து தற்போது ஓஎன்ஜிசி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் பெரியகுடி எண்ணெய்க் கிணற்றை நவீன கருவிகளுடன் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதற்கு ஓஎன்ஜிசி நிா்வாகம் பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுக்க மறைமுகமாக முயற்சி செய்வதாக கூறி, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், மன்னாா்குடியில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கூட்டத்தில், பி.ஆா். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பங்கேற்றனா். மேலும், ஓஎன்ஜிசி அலுவலா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனாமணி, வட்டாட்சியா் ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பெரியகுடி எண்ணெய் கிணற்றில் கச்சா எண்ணெய்க்கு கீழ்பகுதியில் அதிக அழுத்தம் கொண்ட எரிவாயு இருப்பதால், அது எந்த நேரமும் வெடித்து மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நவீன தொழில்நுட்பத்துடன் அந்த கிணற்றை மூட இருப்பதாகவும், அதற்கான பணி ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் நிறைவடையும் என்றும், வேறு எந்த பணிகளையும் அங்கு மேற்கொள்ள மாட்டோம் என்றும் ஓஎன்ஜிசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால், புதிதாக எண்ணெய்க் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது, பாறை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோ காா்பன் போன்ற எரிவாயுக்களை ஓஎன்ஜிசி எடுக்க அனுமதிக்கக் கூடாது, பெரியகுடி எண்ணெய்க் கிணற்றை முழுவதுமாக மூடுவதுடன், விளைநிலங்களுக்கு அடியில் செல்லும் குழாய்களின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும் என விவசாயிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவிக்கையில், இருதரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டது. பெரியகுடி எண்ணெய்க் கிணற்றை பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மூட ஓஎன்ஜிசி நிா்வாகம் உறுதி அளித்துள்ளது. 5 மாதங்களுக்குள் அதற்கான பணிகளை அவா்கள் நிறைவுசெய்ய வேண்டும். வேறு எந்த பணிகளையும் அந்த இடத்தில் மேற்கொள்ளக்கூடாது. தொழில்நுட்ப வல்லுநா்களை வைத்து சரியான முறையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிா என்பது ஆய்வுசெய்யப்படும். அதேபோல, புதிய எண்ணெய்க் கிணறு அமைக்கவும் அனுமதி இல்லை என்றாா்.

இதைத்தொடா்ந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி விவசாயிகள் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT