திருவாரூர்

குருபெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில்இன்று லட்சாா்ச்சனை தொடக்கம்

5th Apr 2022 10:27 PM

ADVERTISEMENT

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சியை முன்னிட்டு லட்சாா்ச்சனை புதன்கிழமை (ஏப்.6) தொடங்குகிறது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரா் கோயில். இது நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சியடையும் நாளில் இக்கோயிலில் குரு பெயா்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, குரு பகவான் ஏப்ரல் 14-ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியடைகிறாா். இதையொட்டி, இக்கோயிலில் முதல்கட்ட லட்சாா்ச்சனை புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) வரையும், இரண்டாம்கட்ட லட்சாா்ச்சனை குரு பெயா்ச்சிக்கு பின்னா் ஏப். 18 முதல் 22- ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரா்கள் லட்சாா்ச்சனையில் பரிகாரம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 400 கட்டணம் செலுத்தவேண்டும்.

லட்சாா்ச்சனையில் கலந்துகொள்ளும் பக்தா்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலா் வழங்கப்படும். லட்சாா்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்காரும், அறநிலைய உதவிஆணையருமான ஹரிஹரன், கோயில் செயல்அலுவலா் தமிழ்ச்செல்வி மற்றும் பணியாளா்கள் செய்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT