திருவாரூர்

தினமணி இணையதளச் செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் குடிசைப் பகுதிக்கு பட்டா, மாற்று இடம் வழங்க நடவடிக்கை

19th Oct 2020 02:36 PM

ADVERTISEMENT

தினமணி இணையதளச் செய்தி எதிரொலியைத் தொடர்ந்து கூத்தாநல்லூரில் குடிசைப் பகுதிக்கு பட்டா, மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், குடிசைப் பகுதிக்கு பட்டா வழங்காததால் 300 குடும்பங்கள் தவிப்பது குறித்து, அக்.15 ஆம் தேதி, தினமணி இணையதளத்தில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியை பார்வையிட்டதன் அடிப்படையில், பட்டா வழங்கிட வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மானியத் தெரு, மேலப்பள்ளி மற்றும் நேருஜி சாலை உள்ளிட்ட மூன்று இடங்களிலும், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இவர்கள் இப்பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார்கள். ஏழை, எளிய மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்தான் வசிக்கிறார்கள். 

இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில், பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என 2000 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இப்பகுதியில், சாலை வசதிகள் கூட கிடையாது. அவசர அவசியமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் கூட பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இச்சக்கர வாகனங்கள் கூட இவ்வழியே செல்ல முடியாத அளவிற்கு பாதை உள்ளன. மேலும், அருகில் ஓடக்கூடிய வாய்க்கால்களில், காட்டாமணிச் செடிகளும், முட்புதர்களும் மண்டியுள்ளன. மேலும், மழைக் காலங்களில் மழைத் தண்ணீர் நிரம்பி, வீட்டிற்குள் புகுந்து விடுவதுடன், பாம்பு, தேள், பூரான், கரண்டு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் புகுந்து விடுகின்றன. 

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் நேருஜி சாலை வாய்க்காகரையை பார்வையிடும் வட்டாட்சியர் மகேஷ்குமார் .

பாதிக்கப்பட்ட இவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உத்தரவுப்படி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஷ்குமார், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி கோட்டப் பொறியாளர், வருவாய் ஆய்வாளர் இளமாறன், கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி உள்ளிட்டோர், மூன்று இடங்களையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இதுகுறித்து, வட்டாட்சியர் மகேஷ்குமார் கூறியது, நகராட்சிக்குட்பட்ட ரஹ்மானியத் தெரு, மேலப்பள்ளி மற்றும் நேருஜி சாலை வாய்க்காக்கரை உள்ளிட்ட 3 இடங்களையும் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

வாய்க்கால் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடமும், பட்டா பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆற்றில் தண்ணீர் குறைந்ததும், வாய்க்கால் சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

Tags : Tiruvarur
ADVERTISEMENT
ADVERTISEMENT