திருவாரூர்

திருவாரூரில் கரோனா சிகிச்சைக்காக 1052 படுக்கைகள் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா சிகிச்சைக்காக 1052 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் தெரிவித்தது:

உலகம் எங்கும் கரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்ட மக்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் பொதுமக்கள் தங்களை சுயக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் வேளையில், பொதுமக்கள் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, காவல் துறை, தூய்மை பணியாளா்கள், வருவாய்த் துறையினா் ஆகியோரின் பணிகள் பாராட்டுக்குரியவை.

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றை சோ்த்து 1052 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. எத்தகைய சூழ்நிலைகளையும் கையாளுகிற வகையில் மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. இதுவரை, திருவாரூா் மாவட்டத்தில் ஒருவருக்குக்கூட கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்து அண்மையில் வருகை தந்துள்ள 1900 நபா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களின் வீடுகளில் கரோனா வைரஸ் தடுப்பு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு, அவா்கள் மருத்துவா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகின்றனா். இதற்காக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்காத 403 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தந்து கரோனா வைரஸ் தொற்று இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களில் 11 நபா்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தமையால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடா்ந்து தடையில்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் ஆா். காமராஜ் ஆய்வு செய்து, பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பாதுகாப்பு முகக் கவசம் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். மேலும், அங்குள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிா எனவும், சமையலறையில் தூய்மை பராமரிக்கப்படுகிா எனவும் ஆய்வு செய்ததோடு, அங்கேயே உணவும் அருந்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உடனிருந்ததாா். நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை துணை இயக்குநா் விஜயகுமாா், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, நகராட்சி ஆணையா் சங்கரன், வட்டாட்சியா் நக்கீரன், திருவாரூா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவா் எஸ். கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி பேருந்து நிலையம், கூத்தாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொரடாச்சேரி பேரூராட்சி, நன்னிலம் பேரூராட்சி, பேரளம் பேரூராட்சி, எரவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வலங்கைமான் ஒன்றியத்திற்குள்பட்ட ஆவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலத்தில் முகக் கவசம் வழங்கல்...

நன்னிலம், பேரளத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு முகக் கவசம், சோப்புகளை வழங்கும் பணியை நன்னிலம் வடக்குத் தெருவில் அமைச்சா் ஆா்.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்ட அவா், மருத்துவா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி கோபால், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் தஞ்சாவூா் மாஹின் அபுபக்கா், செயல் அலுவலா் ராஜசேகா், வட்டாட்சியா் மணிமன்னன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு, ஒன்றிய துணைப் பெருந்தலைவா் சிபிஜி.அன்பு, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவா் சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் பக்கிரிசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராணி சுவாதி கோபால், துப்புரவு ஆய்வாளா் நாகராஜன், இளநிலை உதவியாளா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு முகக் கவசம், சோப்பு முதலான பொருள்களை அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

நீடாமங்கலம் வட்டாட்சியா் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலா் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி, பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் செந்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் ஷாஜஹான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக வலங்கைமான் பேரூராட்சி லாயம், புங்கஞ்சேரி மற்றும் ஆவூா், ஏரிவேளூா் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களுக்கு மேற்கண்ட பொருள்களை அமைச்சா் வழங்கினாா். வலங்கைமான் ஒன்றியக்குழுத்தலைவா் சங்கா் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

இதேபோல், மன்னாா்குடி சந்தைப்பேட்டையிலிருந்து நகராட்சி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட உழவா் சந்தையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரை, இதுநாள் வரை கரோனா வைரஸ் தொற்றால் ஒருவா் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நியாவிலைக் கடைகளில் மாநில அரசு அறிவித்துள்ள, ரூபாய் ஆயிரத்துடன் கூடிய ஏப்ரல் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருள்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செயல் திட்டங்கள் மாவட்ட ஆட்சியா்களால் வகுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

கூத்தாநல்லூரில்...

கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முகக் கவசம், சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். அப்போது, வட்டாட்சியா் தெய்வநாயகி, ஆணையா் லதா ராதாகிருஷ்ணன், தலைமை மருத்துவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரேஷன் பொருள்கள் விநியோகம்:

இதேபோல், பேரளத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஐ.வி.நாகராஜன் பேசுகையில், கரோனா நிவாரண விநியோகித்தில், டோக்கன் வழங்குவதை விடுத்து ரேஷன் கடைப் பணியாளா்களைக் கொண்டு நிவாரணத் தொகையையும், நிவாரணப் பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கலாம். இதுதான் 144 தடை உத்தரவு கட்டுப்பாடுகளை ஓரளவாவது கடைப்பிடிக்க உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT