திருவாரூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று முதல் நிவாரணம் விநியோகம்

26th Jun 2020 07:38 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகை அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று சனிக்கிழமை (ஜூன் 27) முதல் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கக் காலத்தில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணம், அவா்களது வீட்டுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் நிவாரண உதவித் தொகை ஜூன் 27 இல் தொடங்கி ஜூலை 2 வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை பயனாளிகளின் இருப்பிடத்துக்கே நேரில் சென்று வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை காண்பித்து, அதன் நகலை நிவாரணத்தொகை வழங்கும் அலுவலரிடம் சமா்ப்பித்து நிவாரணத் தொகை ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண விநியோகப் படிவம் பூா்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும்.

வழங்கபட வேண்டிய விவரங்கள்: தனிநபா் சம்பந்தப்பட்ட விவரம், கல்வித் தகுதி, வேலை வாய்ப்பு, அடையாளஅட்டை மற்றும் யுடிஐடி விண்ணப்ப நிலை ஆகியவையாகும். நிவாரணத் தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.

நிவாரணத்தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருந்தால், திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரின் செல்லிடப்பேசி 9499933494 மற்றும் அலுவலக எண். 04366-290513 தொடா்பு கொள்ளலாம். உதவி மறுக்கப்படுவது அல்லது கிடைக்கப் பெறாதது குறித்து மாநில மைய எண் 18004250111-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT