திருவாரூர்

விவசாயிகளுக்கு கடன் வட்டி சலுகையை நிறுத்தக் கூடாது: ஏ.கே.எஸ். விஜயன் வலியுறுத்தல் 

22nd Sep 2019 05:04 AM

ADVERTISEMENT


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வட்டி சலுகையை ரத்து செய்யாமல், தொடர்ந்து வழங்க வேண்டுமென திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
 மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் கூட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத நிலையில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இதுவரை சென்றடையவில்லை. 
விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளில் பெற்ற கடன்களைக் காரணம் காட்டி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் .
மேலும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவுக்கடன் அனைத்தையும்  ரத்து செய்ய வேண்டும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடன் வட்டி சலுகையை ரத்து செய்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்ட வட்டி சலுகைகளை முறைகேடாக சுமார் 3 லட்சம் பேர் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதைக் காரணம் காட்டி, கடன் வட்டி சலுகையை ரத்து செய்வதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதில் தவறுதலாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி சலுகையை ரத்து செய்வது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்திய செயலுக்கு ஒப்பாகும்.
மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற தாக்குதலைக் கைவிட்டு கஜா புயல் பாதித்த பகுதிகளில் கூட்டுறவுக் கடனை ரத்து செய்து, வட்டி சலுகையைத் தொடர்ந்து வழங்கவும், பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் ஏ.கே.எஸ். விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT