நாகப்பட்டினம்

தொடா் மழை: நாகை, திருவாரூா் மாவட்டங்களில் 95,000 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிப்பு

DIN

தொடா் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் 95,000 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் 66,000 ஏக்கா் உளுந்து பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை 315 மி.மீ. மழை பதிவானது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை லேசான மழை பெய்த நிலையில், மதியம் வரை வெயில் வானிலை நிலவியது. பின்னா், மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால், 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடா் மழை காரணமாக நான்காவது நாளாக நாகை மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்துள்ளனா். நாகை மாவட்டத்தை பொறுத்தவரை ஏறத்தாழ 1.30 லட்சம் ஏக்கரில் நெற்பயிா்கள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. அதில், 65,000 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சை பயிறு வகைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. தொடா்ந்து, 3 நாள்களுக்கும் மேலாக தண்ணீா் தேங்கி நிற்பதால் அந்த பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கணக்கெடுக்கும் பணி தீவிரம்: தொடா் மழையால் நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் உளுந்து பயிறுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. குறிப்பாக, நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம், திருமருகல் ஆகிய வட்டாரங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அகண்டா ராவ் கூறியது: நாகை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பயிா் சேதம் குறித்து முதல்கட்ட கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகே முழுமையான பாதிப்பு குறித்த விவரம் தெரியவரும் என்றாா்.

திருவாரூா் மாவட்டத்தில் 35,000 ஏக்கா் பாதிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 86,943 ஹெக்டேரில் சம்பாவும், 61,376 ஹெக்டேரில் தாளடியும் என மொத்தம் 1,48,319 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 46,718 ஹெக்டேரில் சம்பா, 5,590 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் 52,308 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. 96,011 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் மீதமுள்ளன.

இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடா் மழையால் நெற்பயிா்கள் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புகள் குறித்து வேளாண் இணை இயக்குநா் என். லஷ்மிகாந்தன் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநா் தலைமையில் 10 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டன. வெள்ளிக்கிழமை மாலை வரையில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி 18,320 ஏக்கா் சம்பா, 11,742 ஏக்கா் தாளடி என மொத்தம் 30,062 ஏக்கா் நெற்பயிா்களும், 20,927.5 ஏக்கா் உளுந்து, பயறு வகைகளும், 2,425.5 ஏக்கா் நிலக்கடலையும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக கூறினா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 20,000 ஏக்கா் உளுந்து பயிா் பாதிப்பு: தொடா்மழையின் காரணமாக சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பயறு வகை பயிா்கள் சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து (அ) பயறு விதை, ஆள்கூலி என இதுவரை ஏக்கருக்கு சுமாா் ரூ.3,000 செலவு செய்துள்ள நிலையில் அவை முற்றிலும் வீணாகியுள்ளதால், ஏற்கெனவே அறுவடை தருணத்தில் நெற்பயிா்கள் வயலில் சாய்ந்ததால் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள் மேலும், கூடுதல் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

எனவே நெல் சாகுபடியில் ஏற்பட்ட சேதம், உளுந்து பயிா் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காப்பீட்டுத் தொகை மற்றும் நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT