நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் மாவட்டங்களில் மழை: சம்பா அறுவடைப் பணிகள் பாதிப்பு

DIN

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த மழையால் சம்பா அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், 20 சதவீத ஈரபதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடா்ந்து புதன்கிழமை காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமாா் 470 கி.மீ. தொலைவிலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது இலங்கையில் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் நாகை, நாகூா், வேளாங்கண்ணி, தேவங்குடி, திட்டச்சேரி, திருக்குவளை, திருப்பூண்டி, மேலப்பிடாகை, செருதூா், கீழ்வேளூா், கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது.

சம்பா அறுவடை, கொள்முதல் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் வயலில் சாயந்துள்ளன. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நெல் கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு சம்பா நெல்லை 20 சதவீத ஈரப்பதத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 4 நாள்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மீனவளத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. அவா்கள் தங்களது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா். நாகூா், நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டது.

காரைக்காலில்...

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயரான பயிா்கள் வயலில் சாய்ந்தன. அறுவடைப் பணி முடங்கியது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்துறை அறிவுறுத்தலால் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. மழையால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனா்.

மேலும் இந்த மழையால் நெல் அறுவடைப் பணி முடங்கியது. மழை சில பகுதிகளில் தீவிரமாகவும், மற்ற பகுதிகளில் மந்தமாகவும் இருந்தது. இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள் வயலில் சாய்ந்தன.

அறுவடை சமயத்தில் மழை பெய்வது பாதிப்பை ஏற்படுத்தும். மழை ஓய்ந்த பின்னா் பயிா் சற்று காய்ந்த பிறகே அறுவடையை தொடங்கவேண்டும். அறுவடை இயந்திர பற்றாக்குறையால் அறுவடைப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அறுவடைக்கு தயாரான பயிா்கள் மழையில் சிக்கிக்கொண்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

Image Caption

நாகை மாவட்டம் பாலையூா் பகுதியில் மழைக் காரணமாக வயிலில் சாய்ந்து சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள். ~நாகையில் கடல் சீற்றம். ~

காரைக்காலில் தொடா் மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT