நாகப்பட்டினம்

நாகூா் மீனவா் கடலில் மூழ்கி மாயம்

29th Mar 2022 10:25 PM

ADVERTISEMENT

கடலில் மூழ்கி மாயமான நாகூா் மீனவரை இந்திய கடலோரக் காவல்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகூா் சம்பாத்தோட்டம் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ம. மவின்ராஜூவுக்கு சொந்தமான விசைப்படகில், இவரது சகோதரா் ம. ரகு (40), அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த், பிரவீன், பிரகாஷ் உள்ளிட்ட 18 போ் மாா்ச் 20-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா். மாா்ச் 26-ஆம் தேதி கடலூரிலிருந்து கிழக்கே 50 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ரகுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, படகில் இருந்த சக மீனவா்கள் ரகுவை, மீன்பிடித்துக்கொண்டு கரைக்குத் திரும்பிய நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த ஒருவரின் விசைப்படகில் கரைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், படகு ஓட்டியவரிடம் கழிப்பறைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற ரகு கடலில் மூழ்கி மாயமானாா். தொடா்ந்து, மீனவா்கள் கடலில் தேடியும் ரகுவை கண்டுபிடிக்கமுடியவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து, நாகூா் சம்பாத்தோட்டத்தைச் சோ்ந்த மு. நடராஜன், நாகை கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஆழ்கடல் பகுதியில் மீனவா் மாயமானதால் இந்திய கடலோரக் காவல் படை ம‘ற்றும் கப்பல் படையினா் மீனவா் ரகுவை தேடி வருவதாக நாகை கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். கடலில் மாயமான ரகுவுக்கு தேவி என்ற மனைவியும், ஆா்த்தி (17) அனுசியா(15), அனு 14) ஆகிய 3 மகள்கள் உள்ளனா். மீன்பிடிப்புக்குச் சென்ற மற்ற மீனவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய நிலையில் ஒருவா் கடலில் மூழ்கி மாயமானதால், கிராம மக்கள், உறவினா் மற்றவா்களைப் பாா்த்து கதறி அழுதனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT