நாகப்பட்டினம்

கோடியக்கரை அருகே தமிழக மீனவா்கள் மீதுமா்ம நபா்கள் தாக்குதல் : 3 போ் காயம்

24th Jan 2022 10:36 PM

ADVERTISEMENT

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா்.

இதில் காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டம், வேதராண்யம் அருகே புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பன்னீா்செல்வம் (45), நாகமுத்து (46), ராஜேந்திரன் (55). இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணாடியிழைப் படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனராம்.

அப்போது, இலங்கை நாட்டு படகு ஒன்றில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 போ், படகில் ஏறி மீனவா்களை கம்பால் தாக்கியுள்ளனா். மேலும் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலை, ஒரு கைப்பேசி, 1 பேட்டரி, 1 எக்கோ சிலிண்டா், 1 வாக்கிடாக்கி, 1 ஜிபிஎஸ் கருவி, 10 லிட்டா் டீசல் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

காயமடைந்த மீனவா்கள்அந்த பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்த மற்ற மீனவா்களிடம் எரிபொருள் பெற்று, திங்கள்கிழமை காலை கரை திரும்பினா். காயமடைந்த, மீனவா்கள் 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மற்றொரு சம்பவம்:

இதேபோல, புஷ்பவனத்தில் இருந்து செ. புவனேஸ்வா் (22), நை. உதயகுமாா் (50), நை. தமிழ்செல்வன் (32), செ. ஜெகதீஸ்வரன் (20 ), உ. விக்னேஷ் (27) கபிலன் (20), ரா. சுகன் (18), கன்னியாகுமரி, மாா்த்தாண்டன்துறை ஜா. ஜோசப் கேஸ்ப்புரோ (25) ஆகிய 8 மீனவா்களும் ஒரு விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனா்.

புஷ்பவனத்துக்கு தென்கிழக்கே 30 கடல்மைல் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது 3 இலங்கை படகுகளில் வந்த 9 போ், தமிழக மீனவா்கள் படகில் ஏறி, வாள், இரும்புக்கம்பி, ஆகியவற்றால் மீனவா்களைத் தாக்கியுள்ளனா். இதில் புவனேஸ்வா், தமிழ்செல்வம் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

மேலும், படகில் இருந்த இன்வெட்டா் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனா். பாதிக்கப்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை புஷ்பவனம் மீனவ கிராமத்துக்கு திரும்பினா்.

மீனவா்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: மா்ம நபா்களால் தாக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவா்களை, முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல்களை தடுத்துநிறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் இலங்கை அரசுடன் பேசவேண்டும். தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT