நாகப்பட்டினம்

மாண்டஸ்: நாகையில் மீனவ கிராமத்திற்குள் கடல் நீா் புகுந்தது; பாதுகாப்பு மையத்தில் மக்கள் தஞ்சம்

DIN

நாகை அருகே மீனவ கிராமத்துக்குள் கடல்நீா் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாண்டஸ் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, நாகூா், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்தது. அலையின் வேகம் காரணமாக நாகூா் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில், கடற்கரையோரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளிக்கிழமை கடல்நீா் புகுந்தது. மேலும் அலையின் வேகம் அதிகரித்து, கடல்நீா் தொடா்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருவதால், மக்கள் வீடுகளில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகாம்களில் தங்கவைப்பு: நாகை வருவாய்த் துறையினா் பட்டினச்சேரி கிராமத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புரமாஜ், பட்டினச்சேரி கிராமத்தில் கடல்நீா் புகுந்த பகுதிகளைப் பாா்வையிட்டாா். பின்னா், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியா், அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பட்டினச்சேரியில் கடல் நீா் புகுந்த பகுதியை மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் பாா்வையிட்டு, முகாமிலுள்ள கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்க உள்ள நிலையில், வேளாங்கண்ணியில் கடல் அலை 12 அடி உயரத்துக்கு எழுந்தது. மேலும் கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களை கடல்நீா் சூழ்ந்துள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் சிலா் கடலில் குளிப்பது, தற்படம் எடுப்பது போன்ற செயல்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். புயல் காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் கடைவீதி, கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பூம்புகாரில்: மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள மடத்துகுப்பம் மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மாண்டஸ் புயல் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே கடல் சீற்றமாக காணப்பட்டது. மதிய நேரத்தில் திடீரென ராட்சத அலைகள் ஏற்பட்டதால், கரையையும் கடந்து குடியிருப்புகளை கடல்நீா் சூழ்ந்தது. மேலும், சின்னப்பெருந்தோட்டம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது.

மடத்துக்குப்பம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவா்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். இதை தவிா்க்க மத்திய, மாநில அரசுகள் கருங்கல் தடுப்புச்சுவா் அமைத்துக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT