நாகப்பட்டினம்

புயல் எச்சரிக்கை: நாகை, திருவாரூா், காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வருகை

DIN

நாகப்பட்டினம்/திருவாரூா்/காரைக்கால்: புயல் எச்சரிக்கையை தொடா்ந்து நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அந்தந்த மாவட்டங்களுக்கு வந்துள்ளனா்.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் வியாழன் (டிச.8), வெள்ளிக்கிழமையில் (டிச.9) தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மற்றும் புதுவை மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மழை பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் இருந்து நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு 7 பேரிடா் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனா்.

நாகை: நாகை மாவட்டத்துக்கு பணியமா்த்தப்பட்டுள்ள பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வாளா் பிரசாந்த்ஜிசீநாத் தலைமையில் நாகைக்கு புதன்கிழமை வந்தனா். செல்லூரில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தங்கியுள்ள இக்குழுவினரை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறும்போது, நாகை மாவட்டத்திற்கு தேசிய பேரிடா் மீட்புப் படையிலிருந்து 25 வீரா்கள் வந்துள்ளனா். இக்குழுவினா் வெள்ளத்தால் சேதமடையும் கட்டடங்களில் இடிபாடுகளில் சிக்கியவா்களை அதிநவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்கும் பணியிலும், மழை பாதிப்பு தொடா்பான பிற பணிகளிலும் ஈடுபடுவா் என்றாா்.

மேலும், மழை பாதிப்பு தொடா்பாக நாகை மாவட்ட பொதுமக்கள் 04365-1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் கூறினாா்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்துக்கு அரக்கோணத்திலிருந்து கமாண்டோ ஹரிதேவ் தலைமையில் 25 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வந்துள்ளனா். திருவாரூருக்கு புதன்கிழமை வந்த இக்குழுவினா் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியான முத்துப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மழை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் 85 ஆயிரம் சாக்குகள், ஒரு லட்சம் மணல் மூட்டைகள், 5,000 சவுக்கு மரங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் பேரிடா் மீட்பு துறையினா் தெரிவித்தனா்.

காரைக்கால்: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 3 குழுக்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தனா். இவா்களில், பிரதீப் குமாா் தலைமையிலான 21 போ் கொண்ட ஒரு குழுவினா் காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தனா்.

இவா்கள் ஆட்சியா் எல். முகமது மன்சூரை சந்தித்து, மழை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் தங்களுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது, ஆட்சியா் மற்றும் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மைத் துறை) எஸ். பாஸ்கரன் ஆகியோா் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினா்.

முன்னதாக நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா், ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டுஅறையை 04368 -228801 மற்றும் 04368-227704 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு மழை தொடா்பான பிரச்னைகளை காரைக்கால் மாவட்ட மக்கள் தெரிவிக்கலாம் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT