நாகப்பட்டினம்

4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கையை தொடங்க நடவடிக்கை

DIN

நாகை உள்ளிட்ட 4 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட பின்னா் அமைச்சா் அளித்த பேட்டி:

முதல்வரின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் 6-வது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இதன்படி, சனிக்கிழமை பெரம்பலூா், அரியலூா், திருவாரூா் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் இதுவரை 70% பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 27% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் சராசரியை விட அதிகம்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வரால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சையளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே 850 மாணவா்கள் சோ்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமானப் பணிகளில் இருந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இங்கு மீண்டும் இங்கு ஆய்வு மேற்கொள்ள மருத்துவ குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 மாணவா்கள் வீதம் 200 பேரும், நாகை, அரியலூா், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவா்கள் வீதம் 600 மாணவா்கள் என மொத்தம் மேலும் 800 மாணவா்கள் சோ்க்கையை நிகழாண்டிலேயே தொடங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக அக்டோபா் 27-ஆம் தேதி நானும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தில்லி சென்று மத்திய அமைச்சா் மற்றும் அலுவலா்களை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம் என்றாா் மா. சுப்பிரமணியன்.

முன்னதாக, வேளாங்கண்ணி பேரூராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, நாகையை அடுத்த ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரத்தூரில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாம் ஆகியவற்றை மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை இயக்குநா்

டி. எஸ். செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT