நாகப்பட்டினம்

வைகோவுக்கு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு

9th Aug 2020 04:48 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு 5000 நபர்களை பணியமர்த்த கோரிக்கை விடுத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, மயிலாடுதுறை மூவலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் கூறியது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 12,000 ஒப்பந்த தொழிலாளர்கள் என்றேனும் பணி நியமனம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு 86 ஆயிரம் பேர் விண்ணப்பத்து, 15 ஆயிரம் நபர்கள் தேர்வெழுதி, 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து கேங்மேனாக நியமிக்கப்பட உள்ளனர். 

இதனை எதிர்த்தும், பணி நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சனிக்கிழமை அறிக்கை வெளியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேங்மேன் பணிக்கு புதிதாக தேர்வெழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் நிலையில், இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள இந்த கருத்து கண்டனத்துக்கு உரியது. 

மேலும், நீதிமன்ற அவமதிப்புக்குரியது. இது பணி நியமனத்துக்காக காத்திருக்கும் 12 ஆயிரம் குடும்பத்தினரின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி, வர்தா, தானே, கஜா போன்ற பேரிடர் காலங்களிலும் மற்றும் தற்போது நீலகிரியில் ஏற்பட்ட பேரிடரிலும் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். எனவே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மனக்கவலை ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிடுவதை நிறுத்தி, முழு விவரங்கள் தெரிந்து அறிக்கை விடும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

ADVERTISEMENT

மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நியமனம் குறித்து உரிய அறிவிப்பு
வெளியாகாவிட்டால், வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாயில்
கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Tags : Vaiko
ADVERTISEMENT
ADVERTISEMENT