மயிலாடுதுறை

பாஜக தலைவா்களின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 80 போ் கைது

16th Oct 2021 01:22 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பாஜக தலைவா்களின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பெண்கள் உள்ளிட்ட 80 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உத்திர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காா் ஏற்றி படுகொலை செய்ததைக் கண்டித்தும், மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யாததைக் கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் மற்றும் உத்தர பிரதேச முதல்வரின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் இரெ.இடும்பையன், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு திரண்டனா்.

இந்த தகவலை அறிந்த பாஜக மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாநில ஓபிசி பிரிவு க.அகோரம், நகர தலைவா் மோடி.கண்ணன் உள்ளிட்டோா் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களின் உருவ பொம்மையை எரிக்கப்போவதாக அங்கு வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து போராட்டம் நடத்த பேரணியாக புறப்பட்டபோது, அவா்களிடமிருந்து 2 உருவ பொம்மைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவா்கள் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற போராட்டக் குழுவினரை போலீஸாா் தடுத்ததால் இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

Tags : மயிலாடுதுறை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT