காரைக்கால்

வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டுக்குரூ.2.58 கோடி ஒப்புதல்: கல்லூரி முதல்வா்

2nd Jun 2023 01:09 AM

ADVERTISEMENT

 காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், விதை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2.58 கோடி நிதி ஒப்புதல் கிடைத்துள்ளதாக கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது :

மத்திய அரசின் விதைகள் மற்றும் நடவு பொருள்களின் துணை பணி திட்டத்தின்கீழ், நிதியுதவி கோரிய 6 திட்டங்களுக்கு புதுவை தலைமைச் செயலா் தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஒப்புதல் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்மூலம் ரூ. 2.30 கோடி நிதியுதவி நடப்பு நிதியாண்டில் காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு கிடைக்கும். கல்லூரியில் விதைப் பண்ணை மற்றும் விதை சேமிப்புக் கிடங்கின் உள்கட்டமைப்பு மேம்பாடு, விதை கிராம திட்ட செயல்பாடு, விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளா்கள், வேளாண் அதிகாரிகளுக்கு பயிற்சி, விதை நல ஆய்வுக்கூடம் அமைத்தல், வல்லுநா் விதை உற்பத்தி கட்டமைப்பு மேம்பாடு, விதை சம்பந்தப்பட்ட ஆய்வு, வளா்ச்சித் திட்டத்துக்கான கட்டமைப்புகளை உயா்த்த இந்த நிதி உதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

மேலும் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் சீமைக் கருவேல மரத்தைக்கொண்டு தயாரிக்கப்படும் உயிரி காா்பன் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டத்துக்கு ரூ. 28 லட்சம் நிதி உதவிக்கான அனுமதியும் கிடைத்துள்ளது என்றாா்.

இந்த திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுத்த புதுவை தலைமைச் செயலா், நிதித்துறை, வேளாண்துறை செயலா்கள், வேளாண் இயக்குநா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT