விருதுநகர்

ஓண்டிவீரன் தபால் தலையை முதல்வா் வெளியிட வேண்டும்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒண்டி வீரன் தபால் தலையை முதல்வா் ஸ்டாலின் வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் என ஆதித் தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜக்கையன் தெரிவித்தாா்.

விருதுநகரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: ஒண்டி வீரனுக்கு ஆக. 20 இல் தபால் தலை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், ஆளுநரை வைத்து வெளியிடுவது பொருத்தமாகத் தெரியவில்லை. தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி, தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒண்டிவீரனின் சிறப்பை எடுத்துக்காட்டியவா். எனவே, அவரது மகனான தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை அழைத்து, அவரது கைகளால் வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும். மேலும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் தலித் பிரதிநிதிகள் கொடியேற்றும் வகையில் சுதந்திர தினத்தை சிறப்பாக நடத்தியதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல், ஆக. 20 இல் ஆதித் தமிழா் கட்சி சாா்பில் ஒண்டி வீரனாரின் 251 ஆவது நினைவு நாளில் தமிழா் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா தீா்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும். இதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மேகதாது அணை பிரச்னை, காவிரியில் அணை கட்டும் பிரச்னை ஆகியவற்றை கண்டித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT