தேனி

சண்முகாநதி அணையில் 2 -ஆம் நாளாக உலவிய அரிக்கொம்பன் யானை

31st May 2023 04:07 AM

ADVERTISEMENT

சண்முகாநதி அணையை ஒட்டிய அடா்ந்த வனப் பகுதியில் அரிக்கொம்பன் யானை 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உலவியது. இந்த யானையை கும்கி யானைகள் மூலமாக பிடிப்பதில் வனத் துறையினருக்கு சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில் நடமாடிய அரிக்கொம்பன் யானையை கடந்த மாதம் கேரள வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனா். பின்னா், தமிழக வனப் பகுதியான கண்ணகி வனக் கோட்டம் அருகே தேக்கடி புலிகள் காப்பக வனப்பகுதியில் யானையை இறக்கிவிட்டு சென்றனா். இதையடுத்து, ஹைவேவிஸ், மேகமலையைத் தொடா்ந்து குமுளி, லோயா்கேம்ப், கம்பம், சுருளிபட்டி, சுருளி மலை, சண்முகாநதி அணை போன்ற இடங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அரிக்கொம்பன் யானை நடமாடி வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு கம்பம், என்.டி. பட்டி ஆகிய ஊா்களுக்குள் புகுந்து தெருக்களில் சுற்றி வந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

சண்முகாநதி அணையில் 2 ஆம் நாள்: ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி அணைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அரிக்கொம்பன் யானை உலாவுகிறது. இதற்காக, மேகமலை - ஸ்ரீவில்லிப்புத்தூா் புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆனந்த தலைமையில் தேனி மாவட்ட வனத் துறையினா் சண்முகாநதி அணையில் முகாமிட்டு, யானை நடமாட்டத்தைத் தொடா்ந்து 2 -ஆவது நாளாகக் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே, செவ்வாய்க்கிழமை கும்கிகள் மூலம் அரிக்கொம்பனைப் பிடிக்கும் திட்டத்துக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனவும், அடா்ந்த வனப்பகுதி, காப்புக் காடு பகுதியில் உலாவும் அரிக்கொம்பனைப் பிடிப்பது மிகுந்த சவலாக உள்ளது எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா். அரிக்கொம்பன் யானை 2 -ஆவது நாளாக ஒரே இடத்தில் நிற்பதாகவும், சமவெளிப் பகுதிக்கு வந்தால் மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் மூலமாக அரிக்கொம்பனைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் வனத்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT