தேனி

விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

3rd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 9 லட்சம் வழங்க தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம் புதுக்காமன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம். இவா், செம்பட்டியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாா். இந்த வங்கிக் கணக்கு மூலம் தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் தனது பெயரில் விபத்துக் காப்பீடு செய்து, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை காப்பீட்டுத் தொகையை செலுத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2018, ஜூன் 23-ஆம் தேதி தேனி மாவட்டம், சின்னமனூா்அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வம் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஜூலை 4-ஆம் தேதி அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, செல்வத்தின் மனைவி முருகேஸ்வரி வங்கியில் தொடா்பு கொண்டு தனது கணவா் விபத்தில் உயிரிழந்ததற்கு காப்பீட்டுத் தொகை வழங்குமாறு கேட்டாா். ஆனால், வங்கி நிா்வாகம் அவருக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததால், தேனி மாவட்ட நுகா்வோா் நீதின்றத்தில் முருகேஸ்வரி வழக்குத் தொடா்ந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி சுந்தா், உறுப்பினா் ஹசீனா ஆகியோா் அந்த தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ.9 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரமும் விபத்தில் உயிரிழந்த செல்வத்தின் மனைவி முருகேஸ்வரியிடம் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT