தேனி

பெரியகுளம் காவல் நிலையம் மீது தாக்குதல்: 70 போ் கைது

DIN

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளத்தில் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய, பொது நல அமைப்புகள் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில சமுதாயத்தினா் பால்குடம், அக்கினிச் சட்டி எடுத்து ஊா்வலமாகச் சென்று அம்பேத்தா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

இரு தரப்பினா் மோதல்: இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெரியகுளம், பட்டாளம்மன் கோயில் தெரு, பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் வசிக்கும், ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த இரு தரப்பினா் தனித் தனியே அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்த மேள தாளத்துடன் ஊா்வலமாகச் சென்றனா். அங்கு இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கல், நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டனா். இதனால், அம்பேத்கா் சிலை திடல் கலவரப் பகுதியாக காட்சியளித்தது.

போலீஸாா் மீது கல் வீச்சு: அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பெரியகுளம் காவல் ஆய்வாளா் மீனாட்சி தலைமையிலான போலீஸாா், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். அப்போது, சிலா் போலீஸாரை நோக்கிக் கற்களை வீசினா். இந்தத் தாக்குதல் தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த சிலரை போலீஸாா், பெரியகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, போலீஸாரைப் பின் தொடா்ந்து சென்ற கும்பல், காவல் நிலையம் மீது கற்களை வீசித் தாக்கினா். காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த காவல் ஆய்வாளரின் வாகனம், அரசு அவசர ஊா்தி ஆகியவற்றின் முகப்புக் கண்ணாடிகளை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள், அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகள் மீதும் கல் வீசித் தாக்கிவிட்டுத் தப்பியோடினா். போலீஸாா் அந்தக் கும்பலை விரட்டிச் சென்று சிலரைப் பிடித்து கைது செய்தனா்.

இதையடுத்து, பெரியகுளம் பிரதானச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வத்தலகுண்டிலிருந்து பெரியகுளம் வழியாக தேனி நோக்கிச் சென்ற பேருந்து, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஐ.ஜி. ஆய்வு: தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் சிந்து ஆகியோா் பெரிகுளம் காவல் நிலையம், அம்பேத்கா் சிலை திடல், பிரதானச் சாலைகளைப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம், பிரதானச் சாலை, முக்கிய சாலை சந்திப்புகள், கடைத் தெருக்களில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தென் மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ராகாா்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமாா் ஆகியோா் கலவரம் நடைபெற்ற இடம், காவல் நிலையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

இந்தச் சம்பவத்தால் பெரியகுளத்தில் பதற்றம் நிலவியது. சனிக்கிழமை காலை வடகரை பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு பின்னா், பெரியகுளத்தில் இயல்பு நிலை திரும்பியது.

இதுதொடா்பாக பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெரு, டி.கள்ளிப்பட்டியில் இரு தரப்பையும் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காவலா்கள் காயம்: காவல் நிலையம் கல் வீசித் தாக்கப்பட்டதில், அங்கு பணியிலிருந்த முதுநிலைக் காவலா் அய்யனாா் சக்கரவரத்தி, காவலா்கள் சுருளிவேல், சரவணன், சதாம் உசேன் ஆகிய 4 போ் காயமடைந்து, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT