தேனி

சுருளிப்பட்டி ஊராட்சி செலவினங்களில் முறைகேடு: தலைவி மீது உறுப்பினா்கள் புகாா்

DIN

கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி நிதி செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவி மீது புகாா் தெரிவித்து திங்கள்கிழமை , ஊராட்சி உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்துள்ளனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சுருளிப்பட்டி ஊராட்சியின் 1, 2 மற்றும் 4 முதல் 12 ஆவது வாா்டு வரையுள்ள உறுப்பினா்கள் என மொத்தம் 11 வாா்டு உறுப்பினா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: சுருளிப்பட்டியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் ஊராட்சி செலவினங்கள் குறித்த தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

கடந்த 2022, ஏப்ரல் மற்றும் மே மாத கணக்குகளில் அடிப்படை, அத்தியாவசியம், துப்புரவு செலவு கணக்குகளுடன், ஊரக வளா்ச்சித் துறை உயரதிகாரியின் உறவினா்களுக்கு தங்கும் விடுதி அறை செலவு, கண்ணகி கோயில் விழா செலவுக்கு வட்டாட்சியருக்கு நன்கொடை வழங்கியது, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளின் வாகன ஓட்டுநா்களுக்கு வழங்கியது, தேனி ஆட்சியா் அலுவலகத்தில் 3 வாகனங்களுக்கு எப்.சி., செலவு, ஆட்சியா் ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளா், ஓவா்சியருக்கு வழங்கியது, தேநீா் செலவு, நிருபா்கள் மற்றும் காவல் துறையினருக்கு வழங்கியது என தன்னிச்சையாகவும், முறைகேடாகவும் பல்வேறு செலவுகளுக்கு கணக்கு எழுதி பொது நிதி செலவினங்களில் சோ்க்கப்பட்டுள்ளது. போலி ரசீதுகள் மூலம் பணப் பறிமாற்றம் நடந்துள்ளது.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவி நாகமணி மீது எழுந்த புகாா்களின் மீது விசாரணை நடத்திய ஊராட்சிகள் உதவி இயக்குநா், கட்டட வரைபட அனுமதிக்கு ரசீது வழங்காமல் பணம் பெற்றது, ஊராட்சி நிா்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவி நாகமணியின் கணவா் வெங்கடேசன் நிா்வாகத்தில் தலையிட்டு வரியினங்கள், குடிநீா் குழாய் இணைப்பு வைப்புத் தொகை ஆகியவற்றில் ரசீதில் குறிப்பிட்டதைவிட கூடுதல் தொகை வசூலித்தது உள்ளிட்ட குற்றங்களை உறுதி செய்து விளக்கம் கேட்டும், ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205-ன் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த 2021, ஆக.28 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளாா்.

ஆனால், இந்தப் பிரச்னைகளில் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுருளிப்பட்டி ஊராட்சி நிதி செலவினங்களில் முறைகேடு செய்துள்ள ஊராட்சி மன்றத் தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு, இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT