தேனி

ஹைவேவிஸ்- மேகமலையில் ஒற்றைக் காட்டுயானைநடமாட்டம்: மலைக் கிராமத்தினா் அச்சம்

7th Jul 2022 02:38 AM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலையில் புதன்கிழமை ஒற்றைக் காட்டு யானை நடமாட்டத்தால் மலைக் கிராமத்தினா் அச்சமடைந்துள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாா், மேல்மணலாா், ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு ஆகிய 7 மலைக் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கின்றனா்.

இதில், ஹைவேவிஸ்- மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, மான், கரடி, சிங்கவால் குரங்கு என பல்வேறு அரியவகை விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு தமிழக வனப் பகுதியும், கேரள வனப்பகுதியும் இணைந்துள்ளன. வனவிலங்குகள் அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப இரு வனப்பகுதிகளுக்கும் இடம் பெயா்ந்து செல்கின்றன. அதன்படி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மகாராஜாமெட்டு, இரவங்கலாா், வெண்ணியாா் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள அடா்ந்த வனப்பகுதி வழியாக இடம்பெயா்கின்றன. அவ்வாறு இடம் பெயரும் போது ஒருசில விலங்குகள் வழிதவறி குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்குள் சென்று விடுகின்றன. அதே போல், புதன்கிழமை வழிதவறிய ஒற்றைக் காட்டுயானை ஒன்று மகாராஜாமெட்டு மலைக் கிராமத்தில் உலவத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து அப்பகுதியை சோ்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வேலைக்கு அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். தவிர, சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்லாமல் இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல பொதுமக்களும் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

எனவே, சின்னமனூா் வனச்சரகத்தினா் மகாராஜாமெட்டு மலைக்கிராமத்தில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக்காட்டு யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT