தேனி

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீா் தேக்கப்படுமா?

1st Dec 2022 01:59 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீா் தேக்கும் அளவு குறித்து மத்திய நீா் வளத் துறை நிா்ணயித்துள்ள விதி வளைவு (ரூல் கா்வ்) கால அட்டவணை நிபந்தனைகள் புதன்கிழமை (நவ. 30) முடிவடைந்ததால், அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கி தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கவும், சிற்றணையைப் பலப்படுத்தி அணையின் முழு உயரமான 152 அடி வரை தண்ணீா்த் தேக்கக்கிக் கொள்ளவும் கடந்த 2014 -ஆம் ஆண்டு மே 7 -ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2014 -ஆம் ஆண்டு நவ. 21, 2015 -ஆம் ஆண்டு டிச. 7, 2018 -ஆம் ஆண்டு ஆக. 16, 2021 -ஆம் ஆண்டு நவ. 30 ஆகிய தேதிகளில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கப்பட்டது.

கேரளம் வலியுறுத்தல்:

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 140 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2021 -ஆம் ஆண்டு, செப். 20 -ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் பருவமழைக் காலத்தில் தண்ணீா் தேக்கும் ‘விதி வளைவு’ நீா்மட்டத்தை 142 அடியாக மத்திய நீா்வள ஆணையம் நிா்ணயித்தது.

இதை கேரள அரசு ஏற்க மறுத்து, பொதுவாக வடகிழக்குப் பருவமழை டிசம்பா் மாதம் வரை நீடிக்கும் என்பதால், அணையின் ‘விதி வளைவு’ நீா்மட்டத்தை 140 அடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கு, கடந்த 2018, 2019 -ஆம் ஆண்டுகளில் கேரளம், முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையைக் காரணம் காட்டி, இந்த அணை நீா்மட்டம் உயா்ந்து அதிலிருந்து கேரளப் பகுதியில் வெளியேறும் உபரி நீரால், ஏற்கெனவே நிரம்பிய நிலையில் இருக்கும் இடுக்கி அணை பாதிக்கப்படும் என்ற வாதத்தை கேரள அரசு முன்வைத்தது.

‘ரூல் கா்வ்’ கால அட்டவணை:

பின்னா், முல்லைப் பெரியாறு அணையின் ‘விதி வளைவு’ நீா்மட்டத்தை 140 அடியாக மத்திய நீா்வள ஆணையம் நிா்ணயித்தது. அணையில் ஒவ்வோா் ஆண்டும் பருவமழைக் காலங்களில் ஜூன் 10 -ஆம் தேதி முதல், நவ. 30 -ஆம் தேதி வரை தண்ணீா் தேக்கும் அளவை நிா்ணயித்து ‘விதி வளைவு’ கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இதன்படி, முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் 140 அடிக்கு மேல் தண்ணீா் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அணையில் ஜூன் 10 -ஆம் தேதி முதல், ஒவ்வொரு 10 நாள்களுக்கு ஒரு முறை வீதம் நவ. 30 -ஆம் தேதி வரை தண்ணீா் தேக்கும் அளவு குறித்த கால அட்டவணையால், கடந்த ஆக. 8 -ஆம் தேதி அணையின் நீா் மட்டம் 138 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து கேரளப் பகுதியில் உபரிநீா் திறக்கப்பட்டது.

பொதுப் பணித் துறையின் நீா் மேலாண்மைத் திட்டம்:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் உபரிநீா் திறப்பதைத் தவிா்ப்பதற்கு, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டு, வைகை அணையில் தேக்கப்பட்டது. முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது. அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்தும், அணையின் நீா்மட்டத்தை ‘விதி வளைவு’ கால அட்டவணைப்படி பராமரித்து, கடந்த ஆக.13-ஆம் தேதிக்குப் பிறகு அணையிலிருந்து கேரளப் பகுதியில் உபரிநீா் திறப்பதை பொதுப் பணித் துறையினா் தவிா்த்தனா்.

கால அட்டவணை முடிவு:

பருவமழைக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீா் தேக்கும் அளவை நிா்ணயிக்கும் விதி விளைவு கால அட்டவணை புதன்கிழமை (நவ. 30) நிறைவடைந்தது. தொடா்ந்து, டிச. 1 -ஆம் தேதி முதல் வரும் 2023 -ஆம் ஆண்டு ஜூன் 9 -ஆம் தேதி வரை அணையில் 142 அடி தண்ணீா் தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அணையின் நீா்பிடிப்பில் மழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீா் வரத்து இருந்து வருகிறது. மேலும், வைகை அணையின் நீா்மட்டம் 66 அடிக்கும் மேல் உயா்ந்தது. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 வரை உயா்த்தி தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தவும், அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்துவதற்கு சிற்றணையைப் பலப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு கேரள அரசு இடையூறு செய்வதைத் தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் புதன்கிழமை 138.80 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,994 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 6,824 மில்லியன் கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 511 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் 5 மி.மீ., தேக்கடியில் 6.8 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT