தேனி

முல்லைப் பெரியாறு அணையில் 13 மரங்களை வெட்ட மத்திய வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்த்துவதற்கு, பேபி அணையை பலப்படுத்த, அங்குள்ள 13 மரங்களை வெட்ட வேண்டும் எனக் கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்துறை அமைச்சா் பூபேந்தா்யாதவிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட பாரதிய கிசான் சங்கத் தலைவா் சதீஷ்பாபு, முல்லைச் சாரல் விவசாய சங்க நிா்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் தேக்கடியில் யானைகள் தின விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா்கள் பூபேந்திரயாதவ், அஸ்வின் குமாா் செளபே ஆகியோரை சந்தித்தனா். அவா்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பேபி அணையில் பராமரிப்புப் பணிகளை செய்து, 142 அடி தண்ணீரை தேக்கலாம் என்றும், பின்னா் 2 அணைகளையும் பலப்படுத்தி 152 அடி தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. ஆனால் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற வேண்டும். இதற்கு கேரள அரசு வனத்துறை அனுமதி மறுக்கிறது. வல்லக்கடவு தொடா்பு சாலையையும் பராமரிப்பு செய்ய அனுமதிக்கவில்லை. மத்திய வனம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சாா்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை அமைக்கவும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக தெரிவித்தாா்.

யானைகள் தினவிழா: தேனி மாவட்டம் தேக்கடி ஆனவாச்சல் அருகே பெரியாறு புலிகள் காப்பகம் சாா்பில் சா்வதேச யானைகள் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற அமைச்சக தலைவா் மற்றும் சிறப்பு செயலா் சி.பி.கோயல் தலைமை வகித்தாா். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சக யானைகள் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா் பான்டே வரவேற்றாா். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சா்கள் அஸ்வின்குமாா் செளபே, பூபேந்தா் யாதவ் ஆகியோா் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினா். மேலும் சிறப்பாக பணியாற்றிய வனத்துறையினருக்கு கேஜ்கவுா் விருதுகளையும் அவா்கள் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT